அவனே ஸ்ரீமன் நாராயணா – விமர்சனம்

நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி
நடிகை ஷான்வி ஸ்ரீவஸ்தவா
இயக்குனர் சச்சின் ரவி
இசை அஜனீஷ் லோக்நாத், சரண்ராஜ்
ஓளிப்பதிவு கரம் சாவ்லா

அமராவதி நகரில் ராமாயண நாடகம் போடுபவர்கள் ஒரு பெரிய புதையலை கொள்ளையடிக்கிறார்கள். அவர்கள் கொள்ளையடித்ததை அறிந்த பிரபல தாதா அவர்களை கொன்று விடுகிறார். அவரது இறப்புக்கு பிறகு மகன்கள் இருவரும் அரியணைக்கு அடித்துக் கொள்கிறார்கள். புதையல் ரகசியமும் நீடிக்கிறது.

அமராவதி போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டராக வரும் ரக்‌ஷித் ஷெட்டி புதையலை பற்றி அறிய முயற்சிக்கிறார். அண்ணன், தம்பி இணைந்தார்களா? ரக்‌ஷித் ஷெட்டி ஏன் புதையலை தேடி வந்தார்? ராமாயண குழுவின் நாடகம் மூலம் புதையலின் ரகசியம் எப்படி வெளிப்படுகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.

ரக்‌ஷித் ஷெட்டி தான் படத்தின் ஒரே தூண். அதை உணர்ந்து சிறப்பாக நடித்து நம் மனங்களை கவர்கிறார். முக்கால்வாசி காமெடி, கால்வாசி ஆக்‌ஷன் என கலந்துகட்டி அடிக்கிறார். அவர் பல்பு வாங்கும் இடங்கள் வயிறை பதம் பார்க்கிறது என்றால் ஆக்‌ஷன் காட்சிகளில் மாஸ் தெறிக்கிறது. 3 மணி நேர படத்தில் எந்த இடமும் போரடிக்காமல் பார்த்துக்கொள்கிறார். வழக்கமான கதாநாயகி போல அறிமுகமாகும் ஷான்வி இரண்டாம் பாதியில் கதையின் முக்கிய திருப்பங்களுக்கு காரணமாகிறார்.

பாலாஜி மனோகர், பிரமோத் ஷெட்டி, மதுசூதன் ராவ், அச்யுத் குமார், கோபால கிருஷ்ண தேஷ்பாண்டே ஆகியோரும் நடிப்பில் கம்பீரம் காட்டுகிறார்கள். படத்துக்கு சுவாரசியம் கூட்டும் இன்னொரு அம்சம் அஜனீஷ் லோக்நாத், சரண்ராஜின் பின்னணி இசை. பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. உல்லாஹ் ஹைதூரின் கலை இயக்கம் பிரம்மிக்க வைக்கிறது. கரம் சாவ்லாவின் ஒளிப்பதிவு அமராவதி என்னும் கற்பனை நகரை கண்முன் கொண்டு வருகிறது.

ரக்‌ஷித் ஷெட்டியும் அவரது குழுவும் திரைக்கதை எழுதி இருக்கிறது. ரசிகனின் நாடித்துடிப்பை அறிந்து அமைத்து இருக்கிறார்கள். வசனங்களை தமிழ்படுத்தி இருக்கும் விஜயகுமாரும் பாராட்டப்பட வேண்டியவர். கன்னட வசனங்களின் சுவாரசியத்தை குறையாமல் கொடுத்து இருக்கிறார். லாஜிக்கை மறந்து குழந்தைகள், குடும்பத்துடன் பார்த்து மகிழக்கூடிய படைப்பாக அவனே ஸ்ரீமன் நாராயணா அமைந்துள்ளது.

மொத்தத்தில் ”அவனே ஸ்ரீமன் நாராயணா” காமெடி தர்பார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!