50-50 – விமர்சனம்

நடிகர் சேது
நடிகை ஸ்ருதி ராமகிருஷ்ணன்
இயக்குனர் கிருஷ்ணா சாய்
இசை தரண் குமார்
ஓளிப்பதிவு பிரதாப்
ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு மூன்று பேரும் அண்ணன், தம்பிகள். இவர்கள் கும்பகோணம் பகுதியில் தாதாவாக இருக்கிறார்கள். இந்நிலையில், சென்னையில் இருந்து வரும் போலீஸ்காரரை அடித்து நொறுக்கிறார்கள். இதனால், கோபமடையும் போலீஸ்காரர் அவர்களை பழிவாங்க காத்துக் கொண்டிருக்கிறார்.

சென்னையில் நல்லவர்கள் என்று பெயர் எடுத்து திருட்டு தொழில் செய்து வரும் சேது மற்றும் அவரது நண்பர்கள் ஒருநாள் போலீசிடம் சிக்குகிறார்கள். இவர்களை வைத்து ஜான் விஜய் சகோதரர்கள் வீட்டில் இருக்கும் பணத்தை திருட சொல்கிறார் போலீஸ்காரர்.

பணத்தை கொள்ளையடிக்கும் சேது மற்றும் நண்பர்கள் ஒரு பேய் பங்களாவில் தஞ்சமடைகிறார்கள். இவர்களை தேடி ஜான் விஜய் சகோதரர்களும் அங்கு வருகிறார்கள்.

இறுதியில் பேய் பங்களாவில் இருக்கும் சேது மற்றும் நண்பர்கள், ஜான் விஜய் மற்றும் சகோதரர்கள் எப்படி வெளியே வந்தார்கள்? அங்கு என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சேது தன்னால் முடிந்தளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருடன் வரும் நண்பர்களும் தங்களுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். நாயகியாக வரும் ஸ்ருதி ராமகிருஷ்ணன் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, பால சரவணன் ஆகியோர் காமெடியில் சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.

வழக்கமான பேய் படங்களுக்கு உரிய பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணா சாய். திறமை வாய்ந்த நடிகர்களை வைத்து சரியாக வேலை வாங்காமல் விட்டிருக்கிறார். படத்தில் காமெடி செய்து அனைவரும் சிரிக்கிறார்கள். ஆனால், பார்ப்பவர்களுக்கு சிரிப்பு வரவில்லை.

தரண் குமார் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பிரதாப்பின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

மொத்தத்தில் ‘50/50’… 25.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!