ரஜினிக்கு நல்லாத் துவங்கிய வருஷம் இப்படி போய் முடியுதே

2019ம் ஆண்டு ரஜினிகாந்துக்கு நல்ல விதமாக துவங்கி இப்படி மோசமாக முடியப் போகிறதே.

பேட்ட
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் அவர் ரசிகர்கள் மட்டும் இன்றி அனைவருக்கும் பிடித்திருந்தது. படத்தில் ஓவர் பில்ட்அப் கொடுக்கப்பட்டாலும் ரொம்ப காலம் கழித்து பழைய ஸ்டைலான ரஜினியை குறும்புத்தனத்தோடு பார்க்க முடிந்தது. பழைய ரஜினியை திரும்பிக் கொண்டு வந்த கார்த்திக் சுப்புராஜுக்கு பாராட்டுக்கள் வந்து குவிந்தது.

தர்பார்
ஜனவரி மாதம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸான பேட்ட படத்தை பார்த்துவிட்டு ரஜினியை பலரும் ஆஹா, ஓஹோன்னு புகழ்ந்து பேசினார்கள். இதனால் 2019ம் ஆண்டு ரஜினிக்கு நல்லவிதமாக துவங்கியது. தர்பார் பட ட்ரெய்லரை பார்த்தவர்கள் அடடா, பேட்டயை விட இந்த படத்தில் ரஜினி படு ஸ்டைலாக இருக்கிறாரே என்று வியந்தார்கள். ட்ரெய்லரே இவ்வளவு மாஸாக இருந்தால் படம் எப்படி இருக்கும் என்று தெரிவித்தனர். இந்நிலையில் தான் அந்த சம்பவம் நடந்தது.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தார்கள். நாடே சட்ட திருத்த மசோதா தொடர்பான போராட்டத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் ரஜினி தனது கருத்தை ட்விட்டரில் தெரிவித்தார். மசோதா குறித்து ரஜினி ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என்றவர்கள் கூட அவர் ட்வீட்டை பார்த்து கடுப்பாகிவிட்டனர். ரஜினி அதிகாரம் படைத்த ஒரு கட்சியின் ஆதரவாளர் என்பதை காட்டிவிட்டார் என்று விமர்சிக்கிறார்கள்.

இப்படி ஆகிடுச்சே
#ShameOnYouSanghiRajini என்கிற ஹேஷ்டேகுடன் மக்கள் ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள். ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள தர்பார் படத்தை புறக்கணிக்கப் போவதாக பலரும் தெரிவித்துள்ளனர். படங்களில் மட்டும் தான் ரஜினி வாய்ஸ் கொடுப்பார். நிஜத்தில் நமக்கு எதுக்கு வம்பு என்று இருப்பார் என விளாசுகிறார்கள். ரஜினி அரசியலுக்கு வரும் முன்பே அவர் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று விமர்சனம் எழுந்துள்ளது. பேட்ட படத்துடன் நன்றாக துவங்கிய ஆண்டு இப்படி கருத்து தெரிவித்ததால் மோசமாக முடிகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!