நடிகர்களின் தந்தை என்பதை விட ஓவியன் என்பதே எனக்கு பெருமை -சிவக்குமார் பேச்சு

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு அரசு கலை, பண்பாட்டுத் துறையின் கீழ் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் 65-வது ஆண்டு விழாவை கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் சங்க கூட்டமைப்பினர் நடத்தினர்.இதில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

நான் சென்னைக்கு வந்து நடிகர் ஆவதற்கு முன்பாக ஒரு ஓவியனாக இருந்தேன். சென்னையில் இருந்து 60 கி.மீ தூரம் சைக்கிளில் மாமல்லபுரம் வந்து தெரு ஓரம் தங்கியிருந்து இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன்தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை வரைந்துள்ளேன். இதற்கு எனது ஆர்வமும் விடாமுயற்சியுமே காரணம் ஆகும். எனவே மாணவர்கள் முயற்சியை எப்போதும் கைவிடக்கூடாது. இது ஒரு தெய்வீக கலைச்சார்பு பயிற்சியாகும். சாதாரண நபர்களுக்கு இது தோன்றாது. உங்களுக்கு கடவுள் வாய்ப்பளித்துள்ளார், வளருங்கள்.

நான் ஒரு நடிகன், நடிகர்கள் சூர்யா, கார்த்தியின் தந்தை என்கிற மகிழ்ச்சி எனக்கு நிறைவை தரவில்லை. நான் ஓவியனாக வாழ்ந்து அலைந்து திரிந்த அந்த நாட்களே எனக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் தந்தது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக அனைத்து பிரிவு மாணவ, மாணவிகள் இடையே நடத்தப்பட்ட மரச்சிற்பம் செதுக்குதல், கழிமண்,கற்சிலைகள் வடித்தல், உலோக உருவம் செய்வது, பெயிண்டிங் உள்ளிட்ட பல்வேறு கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சிவக்குமார் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!