மெரினா புரட்சி – விமர்சனம்

நடிகர் நவீன் குமார்
நடிகை ஸ்ருதி ரெட்டி
இயக்குனர் எம்.எஸ்.ராஜ்
இசை அல் ரூபியன்
ஓளிப்பதிவு வேல்ராஜ்
ஒரு இளைஞனும் இளைஞியும் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு வேலை கேட்டு வருகிறார்கள். அவர்களிடம் ஜல்லிக்கட்டு போராட்டத்தையும், அதன் வரலாற்றையும் 15 நாட்களுக்குள் ஆவணபடமாக எடுத்து வந்தால் வேலைக்கு சேர்த்து கொள்வதாக அந்த தொலைகாட்சி நிர்வாகி கூறுகிறார். இதையடுத்து ஜல்லிக்கட்டு போராட்டம் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், வரலாற்றையும் ஆவணப்படமாக எடுத்து வரும் அவர்கள், அதை தொலைக்காட்சி நிர்வாகியிடம் ஒவ்வொன்றாக விளக்குகிறார்கள். இதுதான் மெரினா புரட்சி திரைப்படம்.

தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ஜல்லிகட்டுக்காக நடைபெற்ற போராட்டம், உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜல்லிக்கட்டு எனும் பாரம்பரியமான வீர விளையாட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்து தமிழகம் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களும் போராட்டம் நடத்தினர்.

ஜல்லிக்கட்டுக்காக போராடியதும், கோஷம் போட்டதும் தான் நிறைய மக்களுக்குத் தெரியும். ஆனால் இப்போராட்டம் எங்கு ஆரம்பிக்கப்பட்டது, ஏன் ஆரம்பிக்கப்பட்டது, யாரால் ஆரம்பிக்கப்பட்டது, அதன் பாதிப்புகள் என்னென்ன, அதன் நன்மைகள் என்னென்ன, பின்னால் நடந்த அரசியல் விஷயங்கள் என்ன என்பதை ஆழமாக எடுத்துரைக்கிறது இந்த மெரினா புரட்சி.

உலகமே வியந்து பார்த்த இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை கமர்சியல் அம்சங்கள் ஏதும் சேர்க்காமால் இயக்குனர் படமாக்கிய விதம் சிறப்பு. இப்படத்திற்காக நிறைய ஆய்வு செய்து, இந்த போராட்டம் பற்றி வெளிவராத பல தகவல்களை படத்தில் சொல்லி இருந்தாலும், சில விஷயங்களை சொல்ல தயங்கியுள்ளதும் திரையில் தெரிகிறது.

படத்தில் நடித்துள்ளவர்கள் சில காட்சிகளே வந்தாலும் சிறப்பாக நடித்துள்ளனர். உண்மை தன்மை கருதி பெரும்பாலான காட்சிகள், ஜல்லிகட்டு போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை கோர்வையாக இணைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் எம்.எஸ்.ராஜ்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணி தெரியாதவர்களுக்கு மிகச் சரியான விளக்கம் கொடுக்கும் படமாக இது அமைந்துள்ளது.

வேல்ராஜின் ஒளிப்பதிவும், அல் ரூபியனின் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன.

மொத்தத்தில் ’மெரினா புரட்சி’ எழுச்சி.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!