ஜுமான்ஜி தி நெக்ஸ்ட் லெவல் – விமர்சனம்

நடிகர் டிவைன் ஜான்சன்
நடிகை காரன் கில்லன்
இயக்குனர் ஜேக் கஸ்டன்
இசை ஹென்றி ஜேக்மேன்
ஓளிப்பதிவு கியூலா படோஸ்
ஸ்பென்சர், பிரிட்ஜ், மார்தா, பெதானி ஆகியோர் முந்தைய ஜுமான்ஜி விளையாட்டிற்குப் பிறகு அவரவர் வழியில் சென்று விடுகின்றனர். காதல் தோல்வியில் இருக்கும் ஸ்பென்சர், மீண்டும் ஜுமான்ஜி உலகத்திற்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டு, உடைந்த வீடியோ கேமை சரி செய்து ஜுமான்ஜி உலகத்திற்கு செல்கிறார்.

ஸ்பென்சரை தேடி அவரது நண்பர்களும் ஜுமான்ஜி உலகத்திற்கு செல்கின்றனர். எதிர்பாராத விதமாக ஸ்பென்சரின் தாத்தாவும் இந்த விளையாட்டில் இணைந்து விடுகிறார். இதையடுத்து ஜுமான்ஜி விளையாட்டை விளையாடும் அவர்கள், கடினமான சவால்களை எதிர்கொள்கிறார்கள். இறுதியில் இவர்கள் அனைவரும் சவால்களை எப்படி சமாளித்தார்கள்? டாஸ்க்குகளை வெற்றிகரமாக செய்து முடித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

2017இல் வெளிவந்த ஜுமான்ஜி வெல்கம் டூ தி ஜங்கிள் படம் நல்ல வரவேற்பைப் வெற்றது. தற்போது இந்த படத்தின் அடுத்த பாகமாக வெளிவந்திருக்கிறது ’ஜுமான்ஜி தி நெக்ஸ்ட் லெவல்’.

டிவைன் ஜான்சன் இந்த படத்தில் வயதானவரின் உடல் மொழியுடன் கூடிய பலசாளியாக நடித்து அசத்தியுள்ளார். இதேபோல் காமெடியிலும் கலக்கி இருக்கிறார். அவர் காட்டும் சீரியஸ் லுக் கூட சிரிப்பை வர வைக்கிறது. கெவின் ஹார்ட் காமெடியில் சிரிக்க வைக்கிறார். காரன் கில்லன், ஜேக் பிளாக், நிக் ஜோனஸ், பாபி கேனவல் என அனைவருமே அவர்களது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள்.

கடந்த பாகத்தை ஒப்பிடுகையில் இதில் சாகச காட்சிகள் சற்று குறைவுதான். ஒவ்வொருவரும் உடல் விட்டு உடல் மாறுவதைத் தொடர்ந்து நடக்கும் உரையாடல்கள் அட்டகாசமாக இருக்கிறது. தமிழ் டப்பிங் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

இயக்குனர் ஜேக் கஸ்டன், சாகச காட்சிகளைப்போல், மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள விதம் சிறப்பு. கியூலா படோஸின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிரோட்டம் கொடுக்கிறது. ஹென்ரி ஜாக்மேனின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.

மொத்தத்தில் ’ஜுமான்ஜி தி நெக்ஸ்ட் லெவல்’ வேற லெவல்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!