திரைப்படமாகும் அயோத்தி வழக்கு…. கங்கனா ரனாவத் தயாரிக்கிறார்

அயோத்தி ராமர் கோயில் வழக்கு ’அபாரஜிதா அயோத்யா’ என்ற தலைப்பில் திரைப்படமாக உருவாகிறது. இப்படத்தை கங்கனா ரனாவத் தயாரிக்கிறார்.

இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் கங்கனா ரனாவத். தமிழில் தாம்தூம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான ‘தலைவி’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

முதல் படத்துக்கு ’அபாரஜிதா அயோத்யா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. நீண்ட காலமாக நடைபெற்று வந்த அயோத்தியா ராமர் கோயில் வழக்கு பற்றிய படம் இது. அடுத்த வருடம் தொடங்கவுள்ள இந்தப் படத்தின் திரைக்கதையை பாகுபலி இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜேயந்திர பிரசாத் எழுதி உள்ளார்.

இந்த படம் பற்றி கங்கனா கூறியதாவது:- பல நூறு வருடங்களாக ராமர் கோயில் பற்றிப் பேசி வருகின்றனர். 80களில் பிறந்த ஒரு குழந்தையாக, தொடர்ந்து அயோத்தியா என்ற பெயரை நான் எதிர்மறையான தன்மையில் தான் கேட்டு வருகிறேன். ஒரு அரசன் பிறந்த ஒரு நிலப்பகுதி. அவன் தியாகங்களின் மறுவடிவமாக இருந்தவன். சொத்து பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறான்.

இந்த வழக்கு இந்திய அரசியலின் அடையாளத்தை மாற்றிவிட்டது. இந்த தீர்ப்பு பல நூறு வருட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அதே நேரத்தில் இந்தியாவின் சமத்துவ ஆன்மாவையும் காத்துள்ளது. ‘அபாரஜிதா அயோத்தியா’ படம், நாயகன் எப்படி கடவுள் நம்பிக்கை இல்லாதவனாக இருப்பதில் இருந்து கடவுள் நம்பிக்கை பெறுகிறான் என்ற பயணமே. ஒரு வகையில் இது என் தனிப்பட்ட பயணத்தின் பிரதிபலிப்பும் கூட. எனது முதல் தயாரிப்புக்கு இது சரியாக இருக்கும் என்று முடிவு செய்தேன்’.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!