இந்தியன் 2 குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி

ஷங்கர்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியன்-2 படம் அதிக பொருட் செலவில் தயாராகி வருகிறது. சேனாதிபதியாக வயதான தோற்றத்தில் நடிக்கும் கமல்ஹாசன் ஊழல்வாதிகளை வர்ம கலையால் அடித்து வீழ்த்தும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

தற்போது கமல்ஹாசன் காலில் பொருத்திய கம்பியை அகற்ற சிறிய அறுவை சிகிச்சை நடந்துள்ளதால் ஓய்வெடுத்து வருகிறார். விரைவில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதில் சித்தார்த், பாபிசிம்ஹா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல்பிரீத் சிங் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இதனிடையே, சமீபத்தில் சென்னையில் கமல்ஹாசனுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு விஜய் சேதுபதி பேசும்போது, ஏற்கனவே கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டதாகவும் மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் நடிப்பேன் என்றும் குறிப்பிட்டார்.

இதையடுத்து இந்தியன்-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வந்த நிலையில், அதனை அவர் மறுத்துள்ளார். இந்தியன் 2-வில் நான் நடிக்க உள்ளதாக பரவும் செய்தியில் உண்மையில்லை, அது வெறும் வதந்தி என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!