கமல், ரஜினியுடன் வைரமுத்து: எனக்கு தடை, அவருக்கு பார்ட்டி, நல்லா இருக்கு நியாயம்: சின்மயி

கமல் ஹாஸன் மற்றும் ரஜினிகாந்துடன் வைரமுத்துவை பார்த்த பாடகி சின்மயி கோபம் அடைந்துள்ளார்.

இந்தியாவில் மீ டூ இயக்கம் வேகம் எடுத்தபோது கவிப்பேரரசு வைரமுத்து மீது பாடகி சின்மயி புகார் தெரிவித்தார். அதன் பிறகுஅவருக்கு பட வாய்ப்புகள் வருவது குறைந்துவிட்டது.

வைரமுத்துவை ஏன் யாருமே கேள்வி கேட்கவில்லை என்று சின்மயி தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார். வைரமுத்து எப்படிப்பட்டவர் என்பது திரையுலகினர் அனைவருக்கும் தெரியும் என இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி ரைஹானா கூட தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கமல் 60 கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்வாக ராஜ்கமல் நிறுவனத்தின் அலுவலகத்தில் மறைந்த இயக்குநர் பாலச்சந்தரின் சிலை திறந்து வைக்கப்பட்டது. சிலை திறப்பு விழாவில் கமல் ஹாஸன், ரஜினிகாந்த் ஆகியோருடன் வைரமுத்துவும் கலந்து கொண்டார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பல பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தும் இந்த வைரமுத்துவை விழாக்களுக்கு அழைக்கிறார்களே என்று விமர்சித்துள்ளனர். சின்மயியும் அந்த புகைப்படத்தை பார்த்து கோபப்பட்டுள்ளார்.

ரஜினி, கமலுடன் வைரமுத்து இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சின்மயி கூறியிருப்பதாவது,

பாலியல் புகார் சுமத்தப்பட்ட ஆண்களின் வாழ்க்கையை மீடூ கெடுத்துவிட்டது(நான் இங்கு வைரமுத்துவை பற்றி சொல்கிறேன்).

பாலியல் புகார் சுமத்தப்படும் ஆணின் வாழ்க்கையும், கெரியரும் கெட்டுப்போகும் என்கிறார்கள். முகத்தை வெளியே காட்ட முடியாதாம். ஆனால் வைரமுத்துவோ இந்த ஆண்டில் திமுக நிகழ்ச்சிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் பயிற்சி அகாடமி நிகழ்ச்சிகள், தமிழ் மொழி நிகழ்ச்சிகள், புத்தக வெளியீட்டு விழாக்கள் மற்றும் பல சினிமா நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். அவருக்கு எதுவும் நடக்கவில்லை.

எனக்கு தான் உடனே தடை விதித்துவிட்டார்கள். பாலியல் தொல்லை கொடுத்தவருடன் பார்ட்டி, புகார் தெரிவித்தவருக்கு தடை என்று திரையுலகை சேர்ந்த பெரிய ஆட்கள் மூலம் நியாயம் கிடைத்துவிட்டது என்று நக்கலாக தெரிவித்துள்ளார்.

மீடூ புகார் தெரிவித்ததோடு சின்மயி நிற்கவில்லை. தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!