விஜய்யை வச்சுக்கிட்டு எப்படி முடியும்?: பிகில் ஆர்ட் டைரக்டர்

விஜய்யை வைத்துக் கொண்டு அவுட்டோர் ஷூட்டிங் நடத்துவது குறித்து ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் மனம் திறந்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள பிகில் படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர். விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்துள்ளதை பார்க்கத் தான் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில் பிகில் படத்தின் ஆர்ட் டைரக்டரான முத்துராஜ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

நிஜ மைதானத்தில் கால்பந்தாட்ட காட்சிகளை படமாக்க முடியுமா என்று அட்லி கேட்டார். மைதானத்தில் படமாக்கினால் ஏற்படும் பிரச்சனைகளை மனதில் வைத்து செட் போட்டுவிடலாம் என்றோம்.

கால்பந்தாட்ட காட்சிகளுக்காக செட் போடுவதை பார்த்து படத்திற்காக வரவழைக்கப்பட்ட அமெரிக்க கால்பந்தாட்ட பயிற்சியாளர் வியப்படைந்தார்.

இவிபி பிலிம் சிட்டியில் 45 நாட்களில் கால்பந்து மைதான செட்டை உருவாக்கினோம். சுமார் 600 பேர் சேர்ந்து செட் போட்டோம். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல நாட்கள் செட்டில் இருந்தார்கள். அவர்களை மைதானத்தில் இருக்கும் கூட்டம் போன்று படத்தில் காட்டப்பட்டுள்ளது.

மீன் மார்க்கெட் உள்ளிட்டவற்றை அடக்கிய ராயபுரம் பகுதி செட் போடுவது தான் சவாலாக இருந்தது. நேப்பியர் பாலத்தில் ஒரு சண்டை காட்சி வரும். அதற்காக அந்த பாலம் போன்று செட் போட்டோம். விஜய் போன்ற பெரிய நடிகரை வைத்துக் கொண்டு அவுட்டோரில் ஷூட்டிங் நடத்த முடியாது என்பதால் செட் போடப்பட்டது.

இந்த ஆண்டில் அதிக செலவில் எடுக்கப்பட்டுள்ள படம் பிகில் என்று நினைக்கிறேன். ஏஜிஎஸ் நிறுவனம் முழு ஒத்துழைப்பு கொடுத்தது. எதற்குமே அவர்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை. அட்லி மற்றும் தயாரிப்பு தரப்பின் ஊக்கத்தால் தான் இது சாத்தியமானது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!