சைக்கோ – விமர்சனம்

நடிகர் உதயநிதி ஸ்டாலின்
நடிகை அதிதி ராவ் ஹைதரி
இயக்குனர் மிஸ்கின்
இசை இளையராஜா
ஓளிப்பதிவு தன்வீர் மிர்

கோவையில் பார்வையற்றவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவை ஒருதலையாக காதலித்து வருகிறார். இதே ஊரில் பெண்கள் சிலர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இது சைக்கோ கொலையாளியின் கைவரிசையாக இருக்கலாம் என தெரியவந்தது.

கொலையாளியை போலீசார் தேடி வரும் நிலையில், நாயகி அதிதி ராவ் அதே பாணியில் கடத்தப்படுகிறார். மற்ற பெண்களை கொலை செய்த நபர்தான் அதிதியையும் கடத்தியிருப்பது உதயநிதிக்கு தெரிய வருகிறது.

இறுதியில் சைக்கோ கொலையாளியிடம் இருந்து அதிதி ராவை உதயநிதி உயிருடன் மீட்டாரா? சைக்கோ கொலையாளி யார்? எதற்காக பெண்களை கொலை செய்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் உதயநிதி, தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். பார்வையற்றவராக இவரின் நடிப்பு கவனிக்க வைத்திருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் அதிதி ராவ் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். சக்கர நாற்காலியில் உட்கார்ந்துக் கொண்டு நடிப்பால் மிரட்டி இருக்கிறார் நித்யா மேனன். துணிச்சலான கதாபாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார். உதயநிதிக்கு கண்ணாக அவருடனே பயணித்திருக்கும் சிங்கம் புலியின் நடிப்பு சிறப்பு.

தனக்கே உரிய கிரைம், திரில்லர் பாணியில் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் தராமல், அனைவருக்கும் சமமான கதாபாத்திரம் கொடுத்து, சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். வழக்கமான மிஷ்கின் படம் என்றாலும் மற்ற படங்களை விட சுவாரஸ்யம் குறைவு என்றே சொல்லலாம். அடுத்தடுத்து வரும் காட்சிகளை யூகிக்க முடிகிறது. அடுத்து என்ன நடக்க போகிறது என்றும் முன்பே தெரிந்து விடுவதால் அதிகமாக ரசிக்க முடியவில்லை.

படத்திற்கு பலம் இளையராஜாவின் இசை. பாடல் மற்றும் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. அதுபோல் தன்வீர் மிரின் ஒளிப்பதிவும் அருமை.

மொத்தத்தில் ‘சைக்கோ’ திரில்லிங் குறைவு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!