பெளவ் பெளவ் – விமர்சனம்

நடிகர் மாஸ்டர் அஹான்
நடிகை நாயகி இல்லை
இயக்குனர் பிரதீப் கிளிக்கர்
இசை டென்னிஸ் வல்லபன்
ஓளிப்பதிவு அருண் பிரசாத்

சிறுவன் மாஸ்டர் அஹான், இவர் தனது பெற்றோரை விபத்தில் இழந்து விடுகிறான். பின்னர் இவன் தனது தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறான். இவனுக்கு எதிர்வீட்டில் இருக்கும் சிவா, தேஜஸ்வி என்கிற புதுமணத்தம்பதி வசித்து வருகிறார்கள். சிறுவன் அஹான் பெரும்பாலும் இவர்களது வீட்டில் தான் இருப்பான். சிறுவனுக்கு நண்பர்கள் யாரும் கிடையாது. அவன் பள்ளிக்கு செல்லும் வழியில் தெரு நாய் ஒன்று இவரை தினமும் விரட்டுகிறது.

இதனால் கோபமடைந்த சிறுவன், அந்த நாயை பழிவாங்க குட்டி நாய் ஒன்றை வாங்கி வளர்க்கிறான். சிறுவன் நாயை மிகவும் பாசத்துடன் வளர்த்து வருகிறான். ஒருகட்டத்தில் சிறுவர்கள் இருவர் ஆற்றில் அடித்து செல்வதை பார்த்த அந்த நாய், தன் உயிரை பணயம் வைத்து அவர்களை காப்பாற்றிவிடுகிறது. இருப்பினும் எதிர்பாராத விதமாக அந்த நாய் ஆற்றில் அடித்து செல்லப்படுகிறது. இறுதியில் நாய் உயிர் பிழைத்ததா? சிறுவன் நாயை கண்டுபிடித்தானா? என்பதே மீதிக்கதை.

சிறுவன் மாஸ்டர் அஹான், பெரும்பாலான காட்சிகளில் கேமராவை இவர் தனியாகவே சந்தித்திருக்கிறார். இருந்தபோதிலும் பார்ப்பவர்களுக்கு சோர்வை ஏற்படுத்தாதவாறு இவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது. குறிப்பாக, இவர் நாயுடன் பழகும் காட்சிகளை சொல்லலாம்.

சிறுவன் அஹானை தொடர்ந்து அதிக காட்சிகளில் வருவது நாய்கள் தான். அதையும் இயக்குனர் சிறப்பாக கையாண்டுள்ளார். மேலும் புதுமணத் தம்பதிகளாக நடித்துள்ள சிவா, தேஜஸ்வி குறைவான காட்சிகளில் வந்தாலும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் சத்யன், ஷர்மிளா, ஆரோக்யராஜ், நாஞ்சில் வி ராம்பாபு, ஜேன், புலிக்குட்டி ஆகியோரும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

இயக்குனர் பிரதீப் கிளிக்கர், நடிகர், நடிகைகளை முன்னிலைப்படுத்தி படங்களை எடுத்து வரும் இயக்குனர்களின் மத்தியில் சிறுவனுக்கும் நாய்க்கும் இடையேயான பாசப் போராட்டத்தை வைத்து திரைக்கதை அமைத்துள்ள விதம் சிறப்பு. காமெடி போன்ற கமர்ஷியல் காட்சிகள் இல்லாதது படத்திற்கு பின்னடைவு. மார்க் டி மியூஸ் மற்றும் டென்னிஸ் வல்லபனின் இசை ஓகே ரகம் தான். அருண் பிரசாத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம்.

மொத்தத்தில் ‘பெளவ் பெளவ்’ புதுமையான படைப்பு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!