வார் – விமர்சனம்

நடிகர் ஹிருத்திக் ரோஷன்
நடிகை வாணி கபூர்
இயக்குனர் சித்தார்த் ஆனந்த்
இசை விஷால் தத்லானி
ஓளிப்பதிவு பெஞ்சமின் ஜாஸ்பர்

இந்திய ராணுவத்தில் உள்ள ரகசிய உளவு டீமின் தலைவராக இருக்கிறார் ஹிரித்திக் ரோஷன், இவர் டீமில் புதிதாக வந்து இணைகிறார் டைகர் ஷெரிப். இவரது தந்தை ராணுவத்தில் இருந்தபோது நாட்டுக்கு செய்த துரோகத்தால் இவர் குடும்பம் அவப்பெயருக்கு ஆளாகிறது. இதனை போக்க ரகசிய உளவுத்துறையில் இணைந்து தனது குடும்பத்தின் மீதுள்ள அவப்பெயரை நீக்கவும், நாட்டின் பாதுகாப்பை காக்கவும் துடிப்போடு இருக்கிறார் டைகர் ஷெரிப்.

இவரை பல சோதனைக்கு பிறகு டீமில் இணைத்து அவருக்கு சிறப்பான பயிற்சி தருகிறார் ஹிரித்திக் ரோஷன். ஒரு கட்டத்தில் ஒரு பயங்கரவாதியை பிடிப்பதற்கான பணியில் இருந்த போது நாயகியை சந்திக்கிறார் ஹிரித்திக் ரோஷன். நாயகி வாணி கபூர் திருமணமாகி கணவனை பிரிந்து தனது 6 வயது மகளுக்காக வெளிநாட்டில் பணிபுரிகிறார். ஹிரித்திக் ரோஷன் தனது பணிக்காக நாயகியை பயன்படுத்துகிறார். அப்போது நாயகி பயங்கரவாதிகளால் கொல்லப்படுகிறார்.

இதனால் மனவேதனை அடையும் ஹிரித்திக் ரோஷன் இந்த சம்பவத்தில் நாட்டை காக்ககூடிய அதிகாரிகளே நாட்டை காட்டி கொடுக்கிறார்கள் என்பதை உணர்கிறார். இம்மாதிரியான தேச துரோகிகளை கண்டுபிடித்து தீர்த்துக்கட்டும் முயற்சியில் இறங்குகிறார் ஹிரித்திக். இதனை அறிந்த பிற அதிகாரிகள் ஹிரித்திக் ரோஷனை தேச துரோகி என முடிவு செய்து அவரை கொல்வதற்கு டைகர் ஷெரிப்பை அனுப்புகிறார்கள். இறுதியில் உண்மை நிலவரம் டைகர் ஷெரிப்புக்கு தெரிய வந்ததா? எதிரிகளின் சூழ்ச்சியில் இருந்து ஹிரித்திக் ரோஷன் தப்பித்தாரா? என்பதே மீதிக்கதை.

ஹிரித்திக் ரோஷன், ஆக்‌ஷன், டான்ஸ், செண்டிமென்ட் என அனைத்து காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார். இவருக்கான தமிழ் டப்பிங்கும் அழகாக பொருந்தி இருப்பது அவரது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கிறது. ஹிரித்திக் ரோஷனுக்கு இணையாக டைகர் ஷெரிப்பும் தனது பங்களிப்பை மிக சிறப்பாக கொடுத்திருக்கிறார். படத்தில் இருவேறு கதாபாத்திரங்களாக வந்து இரண்டிலும் ஸ்கோர் செய்கிறார். இறுதி காட்சியில் ஹரித்திக் ரோஷன் உடனான ஆக்‌ஷன் காட்சியில் இவரின் பங்கு பிரம்மிக்க வைக்கிறது.

நாயகி வாணி கபூர் சிறிது நேரமே வந்தாலும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். மேலும் அசுதோஷ் ராணா, அனில் ஜார்ஜ், அனு பிரியா, கீத் டல்லிசன் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இயக்குனர் சித்தார்த் ஆனந்த், ராணுவத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைத்து படத்தை சிறப்பாக கையாண்டுள்ளார். ஹாலிவுட் தரத்தில் படத்தை எடுத்துள்ளார்.

பெஞ்சமின் ஜாஸ்பரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. விஷால் தத்லானியின் பின்னணி இசை மிரட்டலாக உள்ளது.

மொத்தத்தில் “வார்” ஆக்‌ஷன் விருந்து.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!