“ ‘பிகில்’ ஆடியோ லாஞ்ச்ல நான் பேசியது இதுதான்!” – டேனியல் பாலாஜி

தெறி’, ’மெர்சல்’ படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக விஜய் – அட்லி கூட்டணியில் உருவாகியிருக்கிறது, ’பிகில்’. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், யோகி பாபு, கதிர், டேனியல் பாலாஜி எனப் பலர் நடித்திருக்கும் இந்தப் படம், தீபாவளிக்கு வெளியாகயிருக்கிறது. சமீபத்தில் ’பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் பேசிய பேச்சு, இன்றுவரை பேசுபொருளாக இருக்கும் நிலையில், தான் பேசிய சிலவற்றை எடிட் செய்துவிட்டார்கள் என நடிகர் டேனியல் பாலாஜி ஒரு ட்வீட் செய்திருந்தார். இது குறித்து அவரிடம் பேசினோம்.

“ `பிகில்’ இசை வெளியீட்டு விழாவில், நான் என்ன பேசுனேன்னா, `விஜய், சக நடிகர்களுக்கு உபகாரி; எனக்கு நல்ல நண்பன்; தாய், தந்தைக்கு நல்ல மகன்… இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், அவர் நெஞ்சில் குடியிருக்கும் அவரது ரசிகர்களுக்கு, அவர் ஒரு நல்ல தலைவன்… வருவான்’னு சொல்லியிருந்தேன். இதை அரசியல்னு நினைச்சு எடிட் பண்ணிட்டாங்க’’ என்றவர், தற்போது ஒரு வெப்சீரிஸ் வேலைகளில் பிஸியாக இருக்கிறாராம்.

`காட் மேன்’ என்கிற வெப் சீரிஸில் ஹீரோவாக டேனியல் பாலாஜி நடிக்கிறார். அதில், அவருக்கு சாமியார் வேடமாம். `ஜீ 5’ தளத்திற்காக உருவாகும் இந்த சீரிஸை, விஜய் ஆண்டனியை வைத்து `தமிழரசன்’ படத்தை இயக்கியிருக்கும் பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். `வெண்ணிலா கபடிக்குழு’ லக்‌ஷ்ண் இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!