பணத்திற்கு ஆசைப்பட்டு பங்களாவிற்கு செல்லும் இளைஞர்கள் – ஒங்கள போடணும் சார் விமர்சனம்


நடிகர் ஜித்தன் ரமேஷ்
நடிகை சனுஜா சோம்நாத்
இயக்குனர் ஆர்.எல்.ரவி
இசை ரெஜி மோன்
ஓளிப்பதிவு செல்வகுமார்
நாயகன் ஜித்தன் ரமேஷ், நாயகி சனுஜா சோமநாத்தை காதலித்து வருகிறார். கொஞ்சம் கடனில் இருக்கும் ஜித்தன் ரமேஷ், அதை அடைத்து விட்டு காதலியுடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்று நினைத்து வருகிறார்.

இந்நிலையில், டிவி சேனல் நடத்தி வரும் மனோபாலா, வித்தியாசமான நிகழ்ச்சி ஒன்றை நடத்த வேண்டும் என்று முடிவு செய்கிறார். ஊரில் தனியாக இருக்கும் ஒரு பங்களாவில் பேய் இருப்பதாகவும் மக்கள் யாரும் செல்வதற்கு பயப்படுவதாகவும் அறிகிறார். இந்த வீட்டில் ஒரு வாரம் தங்கி இருந்தால் 1 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவிக்கிறார் மனோபாலா.
இந்த போட்டியில் ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட நான்கு ஆண்களும், நான்கு பெண்களும் அந்த வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு சென்ற பின்பு ஜித்தன் ரமேஷின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுகிறது. மேலும் அந்த வீட்டில் 2 பேரும், வெளியில் ஒருவரும் இறக்கிறார்கள்.

இறுதியில் அந்த வீட்டிற்கு சென்றவர்கள் என்ன ஆனார்கள்? உண்மையில் பேய் இருக்கிறதா? இல்லையா? ஜித்தன் ரமேஷின் நடவடிக்கையில் என்ன மாற்றம் ஏற்பட்டது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படம் மூலம் என்ட்ரி கொடுத்திருக்கிறார் ஜித்தன் ரமேஷ். முதல் பாதியில் இளமை துள்ளலுடனும் இரண்டாம் பாதியில் மாறுபட்ட நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். கஜேஷ் நாகேஷ், கல்லூரி வினோத் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். கதாநாயகி உள்பட 5 பெண்கள் புதுமுகங்கள் என்பதால் அவர்களிடம் அதிக அளவில் நடிப்பை எதிர்ப்பார்க்க முடியவில்லை.

பாடலாசிரியர் முருகன் மந்திரம், இப்படத்தில் பாடல்கள் மற்றும் வசனத்தை எழுதி இருப்பதோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார். இவரது பாடல்கள், வசனம், நடிப்பு ஆகியவை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

அடல்ட் காமெடியை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார்கள் இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித். ஆனால், அடல்ட் காமெடி பெரியதாக எடுபட வில்லை என்றே சொல்லலாம். ஒரு கதையில் தொடங்கும் திரைப்படம் பின்னர் அதற்குள் நிறைய கிளை கதைகளை புகுத்தி முடித்திருக்கிறார்கள். திரைக்கதையில் தெளிவு இல்லாமல் அமைந்திருக்கிறது.

ரெஜி மோன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் ஸ்கோர் செய்திருக்கிறார். செல்வ குமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

மொத்தத்தில் ‘ஒங்கள போடணும் சார்’ இளைஞர்களுக்கு மட்டும்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.