ஒருவர் செய்யும் தவறு, அவரது குடும்பத்தை எப்படி பாதிக்கும் – ஜீவி விமர்சனம்

நடிகர் வெற்றி
நடிகை மோனிகா சின்னகோட்ளா
இயக்குனர் கோபிநாத் விஜே
இசை சுந்தரமூர்த்தி
ஓளிப்பதிவு பிரவின் குமார்
91100
ஊரில் ஊதாரித்தனமாக சுற்றித்திரிகிறார் நாயகன் வெற்றி. இவருக்கு புத்தகம் படிப்பதில் அதிக ஆர்வம். குடும்ப சூழல் காரணமாக வேலைக்குப்போக முடிவு செய்து ஊரில் இருந்து சென்னைக்கு வந்து டீ கடையில் வேலை செய்கிறார். இவருடன் பணிபுரியும் கருணாகரனுடன் ஒரே வீட்டில் தங்கி வேலை பார்க்கிறார்.

எதிர் கடையில் வேலை பார்க்கும் மோனிகாவுடன் வெற்றிக்கு காதல் மலர்கிறது. நன்றாக காதலித்து வரும் நிலையில், பணத்தை காரணம் காட்டி வெற்றி விட்டு செல்கிறார் மோனிகா. இந்நிலையில், வெற்றி தங்கியிருக்கும் வீட்டு ஓனர் ரோகினி ஒரு விபத்தில் சிக்க, அவரது பீரோ சாவி அடங்கிய பர்ஸ் தொலைந்து போகிறது. இந்த பர்ஸ் வெற்றி கையில் கிடைக்கிறது.

ரோகினி தனது கண்பார்வை இல்லாத பெண்ணின் திருமணத்திற்காக நகை சேர்த்து அதை பீரோ வைத்திருப்பது வெற்றி தெரிய வருகிறது. அதை திருட முடிவு எடுக்கும் நேரத்தில், வெற்றியின் ஊரில் அக்கா வீட்டை விட்டு ஓடி போனதாகவும், அப்பாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டுவிட்டதாகவும் போன் வருகிறது.

ஒரு வழியாக நகையை திருடி விட்டு வரும் போது தந்தை இறந்ததாக போன் வருகிறது. இதனால் ஊருக்கு சென்று விடுகிறார் வெற்றி. ஆனால், போலீசுக்கு இவர் மேல் சந்தேகம் வராமல், வேறொருவர் மீது சந்தேகம் வருகிறது. ஒரு கட்டத்தில் ஊரில் இருந்து திரும்பி வரும் வெற்றி, ரோகினியை சந்தித்து பேசுகிறார்.

ரோகினி வெற்றியிடம், நகை திருடுபோனதை பற்றி கூறுகிறார். மேலும், நான் வீட்டை விட்டு ஓடி வந்து திருமணம் செய்துக் கொண்டேன். என் அப்பாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்து போனார் என்று கூறுகிறார். இவர் சொல்லுவது தன்னுடைய வாழ்க்கையில் நடந்தது போல் வெற்றி உணர்கிறார். அதன் பின் அவரது வாழ்க்கை என்ன ஆனது? நகையை திருப்பி கொடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

8 தோட்டாக்கள் படத்தில் அப்பாவியாக நடித்த வெற்றி இப்படத்தில் அப்படியே வேறு மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்து கவர்ந்திருக்கிறார். படத்தில் புத்திசாலித்தனமாக அவர் செய்யும் ஒவ்வொரு காரியமும் நம்மை ஈர்க்கிறது.

அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார் கருணாகரன். ஒரு சில இடங்களில் அவரது காமெடி சிரிப்பை வரவைக்கிறது. நடிப்பதற்கு பெரிய வாய்ப்பு இல்லை என்றாலும், கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார் நாயகி மோனிகா.

வீட்டு உரிமையாளராக வரும் ரோகினி, படத்தின் திருப்புமுனையாக வரும் மைம் கோபி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

தொடர்பியல் முக்கோண அறிவியலின் அடிப்படையில் இருவேறு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் ஒரே மாதிரியான சம்பவங்கள், ஒரு மையப்புள்ளியில் நிற்பது தான் படத்தின் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். புரியாத சயின்ஸ் பாடத்தை, மிகத் தெளிவாக, ஜனரஞ்சகமாக விளக்கி இருக்கிறது இப்படம். வலுவான கதையை எழுதி, அதற்கு மிக சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் பாபுதமிழ். அதனை குழப்பமில்லாமல், தெளிவாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர் கோபிநாத். இருவருக்கும் மிகப் பெரிய பாராட்டுகள்.

குழப்பமான கதையம்சம் உள்ள ஒரு படத்தை மிக தெளிவாக புரிய வைத்திருக்கிறார் எடிட்டர் பிரவீன். சுந்தரமூர்த்தியின் இசையில் ‘விடைகளே கேள்விகளாய்’ பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். பிரவின் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

மொத்தத்தில் ‘ஜீவி’ அறிவு ஜீவி.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.