‘மெர்சல்’ படத்தின் வசூல் ரூ.200 கோடியை நெருங்கும் என எதிர்பார்ப்பு!!!


நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு ரிலீசாகி உலகம் முழுவதும் ஓடிக்கொண்டு இருக்கிறது.

மெர்சல் படத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி., பணமதிப்பு நீக்கம், டிஜிட்டல் இந்தியா திட்டம் பற்றி குறைகூறி இருப்பதற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்தது. அந்த கட்சி தவிர எதிர்க்கட்சிகள் மெர்சல் படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

மெர்சல் பட பிரச்சினையில் பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்தார். டாக்டர்களும் மருத்துவத்தை குறைகூறி இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


இதுபோன்ற காரணங்களால் மெர்சல் படம் கடந்த ஒரு வாரமாக திரைஉலகிலும், அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மெர்சல் படத்தில் ஆட்சேபகரமான வசனங்கள் நீக்கப்படுமா? என்ற நிலையும் ஏற்பட்டது. இறுதியில் காட்சிகளோ, வசனங்களோ நீக்கம் இல்லை என்று பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்ததை தொடர்ந்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.


மெர்சல் சர்ச்சையில் சிக்கிய நிலையில் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் படம் வெற்றிகரமாக ஓடியது. தமிழில் வெளியான இந்த படம் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலும் வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டது.

தமிழ்நாட்டில் முதல் நாளில் மட்டும் மெர்சல் படம் ரூ.22 கோடி வசூலித்து முந்தைய சாதனைகளை முறியடித்தது. ஒரு வாரம் முடிந்த நிலையில் மெர்சல் படம் உலகம் முழுவதும் ரூ.160 கோடி முதல் ரூ.170 கோடி வரை வசூல் சாதனை படைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


படத்தை ரூ.80 கோடி செலவில் தயாரிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தயாரிப்பு செலவு அதிகரித்து ரூ.130 கோடியை தொட்டது. ஒரு வாரத்தில் தயாரிப்பு செலவை தாண்டி படம் வசூலித்து இருக்கிறது.

தமிழில் ரஜினி அல்லாத மற்ற நடிகர்களின் படவசூலை மெர்சல் முறியடித்துள்ளது. வெளிநாடுகளில் அஜித்தின் விவேகம் படத்தை விட மெர்சல் படம் அதிக வசூல்பெற்று இருக்கிறது.


சிங்கப்பூரிலும், இங்கிலாந்திலும் கபாலி படத்தின் வசூலை மெர்சல் நெருங்கியது. 2-வது வார இறுதியில் மெர்சல் படம் ரூ.200 கோடி வசூலிக்கும் என்று திரைஉலக பிரமுகர்கள் கருத்து தெரிவித்தனர்.

திரைஉலக பிரமுகர் ஒருவர் கூறுகையில், அரசியல் வதிகளின் சர்ச்சைக்குரிய கருத்துக்களாலும், எதிர்ப்புகளாலும் மெர்சல் படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைத்தது. இதனால் தான் படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!