பேத்தியாக மாறிய பாட்டி அடிக்கும் லூட்டி – பேரழகி ஐ.எஸ்.ஓ விமர்சனம்

நடிகர் விவேக் ராஜ்
நடிகை ஷில்பா மஞ்சுநாத்
இயக்குனர் விஜயன்.சி
இசை சார்லஸ் தனா
ஓளிப்பதிவு இ.ஜே.நவ்‌ஷத்
66100
சச்சுவின் மகன் லிவிஸ்டன், பேத்தி ஷில்பா மஞ்சுநாத். வயதானாலும் இளமையோடு இருப்பதாக நினைத்துக் கொண்டு ஜாலியாக இருக்கிறார் சச்சு.

அதே பகுதியில் வசித்து வரும் நாயகன் விவேக் ஒரு போட்டோகிராபர். அழகான பெண் ஒருவரை தேர்வு செய்து அவரை வைத்து மாடலிங் போட்டோக்கள் எடுத்து பெரிய ஆளாக வேண்டும் என்று விரும்புகிறார். இந்த நிலையில், ஷில்பாவை பார்த்து அவருடன் பழக்கம் ஏற்படுத்திக் கொள்கிறார்.

இதற்கிடையே, சச்சுவின் லூட்டியை தாங்க முடியாத லிவிங்ஸ்டன் அவரை திட்ட, சச்சு வீட்டை விட்டு வெளியேறி கார்பரேட் நிறுவனம் ஒன்றின் பிடியில் சிக்கிக் கொள்கிறார். இளமையுடன் வாழ்வதற்கான மருந்தை சச்சுவை வைத்து அவர்கள் சோதிக்கிறார்கள். அழகிலும் இளமையிலும் அதிக கவனம் செலுத்தும் சச்சு, இந்த கும்பலிடம் சிக்கி தன் பேத்தி ஷில்பா மஞ்சுநாத் போன்ற உருவத்துக்கு மாறிவிடுகிறார். இதற்கிடையே விவேக் – ஷில்பா இடையே காதல் ஏற்படுகிறது. தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருக்கும் இவர்களுக்கிடையே விவேக் சிக்கித் தவிக்க, ஒரு கட்டத்தில் இவர்களது காதலில் பிளவு ஏற்படுகிறது.

கடைசியில், இளமையான தோற்றத்தில் இருக்கும் சச்சு தனது பழைய தோற்றத்துக்கு மாறினாரா? ஷில்பா – விவேக் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஷில்பாவிற்கு வித்தியாசமான இரட்டை வேடம். அசத்தி இருக்கிறார். பாட்டி குரலில் அவர் பேசிக்கொண்டு அடிக்கும் கலாட்டாக்கள் சிரிப்பை வரவைக்கின்றன. படத்தின் இன்னொரு நாயகியாக சச்சு. அனுபவ நடிப்பால் கவர்கிறார். தனது கதாபாத்திரத்தை உணர்ந்து இறங்கி அடித்துள்ளார்.

பாட்டி யார், பேத்தி யார் என்பது தெரியாமல் குழம்பும் ஷில்பாவின் காதலர் பாத்திரத்தில் விவேக், சச்சுவின் மகனாக லிவிங்ஸ்டன், கார்ப்பரேட் அதிபராக சரவண சுப்பையா, போட்டோவில் மட்டும் வாழ்ந்துகொண்டு அடிக்கடி பாட்டியுடன் உரையாடும் கணவர் டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.

புதுமையான ஒருவரிக்கதையை எடுத்து அதில் சரியான கதாபாத்திரங்களை உருவாக்கி கவனிக்க வைக்கிறார் இயக்குனர் சி.விஜயன். முன்பாதியில் உள்ள வேகமும் விறுவிறுப்பும் பின்பாதியிலும் தொடர்வது சிறப்பு. திரைக்கதை, வசனத்திலும் தொழில்நுட்ப வி‌ஷயங்களிலும் இன்னும் கவனம் செலுத்தி இன்னும் நன்றாக சிரிக்க வைத்து இருக்கலாம். வித்தியாசமான கதைக்களத்தில் ஷில்பா, சச்சுவின் நடிப்பால் இந்த பேரழகி கவர்கிறாள்.

இ.ஜே.நவ்‌ஷத்தின் ஒளிப்பதிவு தரம். சார்லஸ் தனாவின் இசையில் பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. ஆனால் பின்னணி இசை சில இடங்களில் ஒட்டவில்லை.

மொத்தத்தில் `பேரழகி ஐ.எஸ்.ஓ’ அழகு தான்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.