அவசர அழைப்பின் பின்னணி – 100 விமர்சனம்

நடிகர் அதர்வா முரளி
நடிகை ஹன்சிகா மோத்வானி
இயக்குனர் சாம் ஆண்டன்
இசை சாம்.சி.எஸ்.
ஓளிப்பதிவு கிருஷ்ணன் வசந்த்
74100
நாயகன் அதர்வா போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வேலைக்காக காத்திருக்கிறார். அவரது காதலியான ஹன்சிகா டெலிகாலராக வேலை பார்க்கிறார். இதற்காகவே ஹன்சிகாவை கிண்டல் செய்து வருகிறார்.

அதர்வாவின் நண்பர் மகேஷ் போலீஸ் வேலையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அதர்வாவுக்கு போலீஸ் வேலை கிடைக்கிறது. ரவுடிகள் மற்றும் தவறு செய்பவர்களை தண்டிக்க வேண்டும் என்ற கனவோடு பணியில் சேரும் அதர்வாவிற்கு, அவசர உதவி எண்ணான 100-க்கு வரும் அழைப்புகளை எடுக்கும் டெலிகாலராக பணியாற்றும் நிலை ஏற்படுகிறது.

தொலைப்பேசியில் அவசர உதவிக்கு அழைப்பவர்களை காவல் நிலையத்திற்கு மாற்றாமல், தானே நேரில் சென்று உதவி செய்து வருகிறார் அதர்வா. இந்நிலையில், இறந்ததாக கருதப்படும் அதர்வாவிற்கு தெரிந்த பெண் ஒருவர் 100 நம்பரை அழைக்கிறார். அவருடன் பேசும் அதர்வா அதிர்ச்சியடைகிறார். மேலும் அந்த பெண் தான் ஒரு பெரிய ஆபத்தில் இருப்பதாகவும், தன்னை கடத்தி வைத்திருப்பதாகவும் கூறுகிறார்.

இதற்கு பின்னால் பெரிய கும்பல் இருப்பதை அறியும் அதர்வா, தன்னுடைய நண்பன் மகேஷ் இதில் ஈடுபட்டிருப்பதையும் தெரிந்து கொள்கிறார்.

இறுதியில் அந்த பெண்ணை காப்பாற்றினாரா? நண்பன் மகேஷுக்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் அதர்வா, முதல் முறையாக போலீஸ் உடை அணிந்து நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரம் அவருக்கு கச்சிதமாக பொருந்திருக்கிறது என்றே சொல்லலாம். கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மிடுக்கான போலீசாக வலம் வருகிறார். நாயகியாக நடித்திருக்கும் ஹன்சிகாவிற்கு அதிகமாக வேலை இல்லை. பாடல் மற்றும் சில காட்சிகளில் வந்து சென்றிருக்கிறார்.

நண்பராக வரும் மகேஷ் கொடுத்த வேலையை சிறப்பாக நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் ஆடுகளம் நரேன், ராதாரவி ஆகியோர் கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள். யோகிபாபுவின் காமெடி கைக்கொடுத்திருக்கிறது.

போலீஸ் கதையாக இருந்தாலும் வித்தியாசமான திரைக்கதையுடன் படத்தை இயக்கி இருக்கிறார் சாம் ஆண்டன். அவசர எண்ணான 100 பற்றியும், அதன் பின் செயல்படுபவர்களை பற்றியும் விளக்கி இருக்கிறார் இயக்குனர். அதர்வாவிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். ஒரு சில லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம்.

த்ரில் காட்சிகளுக்கு ஏற்றவாறு வரும் சாம் சி.எஸ்-ன் இசையும், கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘100’ அவசரம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.