மகேந்திரன் மறைவு – திரையுலப் பிரபலங்கள் இரங்கல்

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனரான மகேந்திரன் (79) சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், ஜானி, காளி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார். மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படம் 3 தேசிய விருதுகளை பெற்றுள்ளது. பல படங்களில் நடித்தும் இருக்கிறார். இவரது படங்கள் பல்வேறு இளம் இயக்குநர்களுக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்துள்ளது. இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், திரைப்பட இயக்குநர்கள் பலருக்கும் முன்னோடியாக திகழ்ந்த இயக்குநர் மகேந்திரனின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது. நீங்களும், உங்களது படங்களும் என்றென்றும் எங்களது இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஐயா. என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் சேரன் ட்விட்டரில், முள்ளும் மலரும் என்று சொன்ன நீங்கள் மீண்டும் மலரவேண்டும். உதிரிப்பூக்கள் எடுத்த நீங்கள் எங்கள் இதயத்தில் என்றும் உதிராப்பூக்கள்…. உங்கள் படைப்புகளோடு என்றும் எங்களோடு வாழ்வீர்கள்… நீங்கள் இல்லையென்ற செய்தி வந்தபோது உங்கள் படைப்புகளின் ஆயிரம் காட்சிகள் கோர்வையாக வந்துபோகிறது.

இயக்குநரும், நடிகருமான மனோபாலா, ஒரு நாள் முன்னதாக அவரை சந்தித்தேன். அருமையான மனிதர். அவர் தன் கண்களை திறந்து மூடினார். இளைஞர்களுக்கான முன்னோடி, அவரது ஆத்மா அமைதியடையட்டும்.

https://twitter.com/LakshmyRamki/status/1112908544976674817

இயக்குநர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டரில், எங்கள் காலத்தின் ஆகச்சிறந்த படைப்பாளரான மகேந்திரன் அவர்களுக்கு எனது வேண்டுதலும், மரியாதையும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.