இந்திரஜித் – சினிமா விமர்சனம்


பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக சூரியனிலிருந்து தெறித்துவரும் ஒரு துகள் பூமியில் வந்து விழுகிறது. மனிதனுக்கு ஏற்படும், காயங்களையும், நோய்களையும் குணப்படுத்தும் சக்தி அந்த துகளுக்கு இருப்பதால் சித்தர்கள் அதை ஒரு ரகசிய இடத்தில் வைக்கிறார்கள். அவர்கள் காலத்திற்குப் பிறகு அந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்பது தெரியாமலேயே போய்விடுகிறது.

இதை தொல்பொருள் ஆராய்ச்சியின் பேராசிரியராக இருக்கும் சச்சின் கேதகர் தேட ஆரம்பிக்கிறார். இவரிடம் உதவியாளராக வந்து சேருகிறார் இந்திரஜித். அதே நேரத்தில் இந்திய தொல்லியல் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் அந்தப் பொருளைத் தேடுகிறார். இறுதியில் அந்த துகள் யாரிடம் கிடைத்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கவுதம் கார்த்திக், தனக்கெரிய உரிய துறுதுறுப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். படத்தில் சொனாரிகா பதோரியா, அஷ்ரிதா ஷெட்டி இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும், அவர்களுடன் ரொமன்ஸ் செய்யும் வாய்ப்பு குறைவாக உள்ளது. சொனாரிகா முதல் சில காட்சிகளிலும், அஷ்ரிதா ஷெட்டி கவுதம் கார்த்திக் குழுவினருக்கு உதவி செய்யும் பெண்ணாக வருகிறார்.

புதையல் தேடிப் புறப்படும் பல கதைகள் தமிழில் வெளிவந்திருந்தாலும், ஹாலிவுட் படங்களைப் போல எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. தொழில்நுட்பக் குறைபாடுகளால் பல தமிழ்ப் படங்கள் தோல்வியை சந்தித்து இருக்கிறது. ஆனால், ‘இந்திரஜித்’ படம் சிறந்த ஆக்ஷன் அட்வென்ச்சர் படமாக உருவாகியிருக்கிறது.


புதையல் தேடும் கதையை அறிவியல் ரீதியாக மாற்றி பேன்டஸியாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் கலா பிரபு. கிராபிக்ஸ், VFX காட்சிகள் ரசிக்கும் படி உள்ளது. பல காட்சிகள் பார்க்கும் போது பிரமிப்பாக உள்ளது. திரைக்கதையில் இன்னும் விறுவிறுப்பு, சுவாரஸ்யம் சேர்த்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

காட்டுக்குள் நடக்கும் சேசிங் காட்சிகளையும், அடர்ந்த காட்டின் ரம்மியத்தையும் அழகாகப் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் இராசாமதி. கே.பி. இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை, கதையின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

மொத்தத்தில் ‘இந்திரஜித்’ சுவாரஸ்யம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#