கோமாவில் இருக்கும் காதலியை மீட்க போராடும் இளைஞன் – எம்பிரான் விமர்சனம்

நடிகர் ரெஜித் மேனன்
நடிகை ராதிகா ப்ரீத்தி
இயக்குனர் கிருஷ்ணா பாண்டி
இசை பிரசன்னா
ஓளிப்பதிவு புகழேந்தி
தாத்தா மௌலி அரவணைப்பில் இருக்கிறார் நாயகி ராதிகா ப்ரீத்தி. இவர் டாக்டராக இருக்கும் நாயகன் ரெஜித் மேனனை துரத்தி துரத்தி காதலித்து வருகிறார். தன்னுடைய காதலை எப்படி ரெஜித்திடம் சொல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார். இந்த விஷயம் தாத்தா மௌலிக்கு தெரிய வருகிறது.

ரெஜித்திடம் இவரின் காதலை சொல்ல, ராதிகா ப்ரீத்தியை அழைத்துக் கொண்டு செல்கிறார் மௌலி. அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட தாத்தா மௌலி விபத்தில் இறக்கிறார். நாயகி ராதிகா ப்ரீத்தி கோமா நிலைக்கு செல்கிறார்.

இந்நிலையில், ரெஜித் மேனனுக்கு, ராதிகா ப்ரீத்தி பற்றிய கனவுகள் வருகிறது. பின்னர் ராதிகாவின் கோமா நிலைமை அறிந்து அவருக்கு உதவி செய்கிறார்.

இறுதியில் ராதிகா ப்ரீத்தி கோமா நிலைமையில் இருந்து மீண்டாரா? காதலில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் ரெஜித் மேனன் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். அழகாக இருக்கும் இவர், சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்தால் நல்ல இடம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் ராதிகா ப்ரீத்தி, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஒருதலை காதலை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கிரிஷ்ணா பாண்டி. வழக்கமான கதையை வித்தியாசமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள். தேவையற்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம். சிறிய கதையை மெதுவாக சொல்லியிருக்கிறார். ஆனால், பெரியதாக எடுபட வில்லை. இயக்குனர் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. படத்தொகுப்பும் கை கொடுக்கவில்லை.

புகழேந்தியின் ஒளிப்பதிவும், பிரசன்னாவின் இசையும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘எம்பிரான்’ எழவில்லை.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.