நடுத்தர குடும்பத்தினரின் போராட்டம்…. டூலெட் விமர்சனம்

சந்தோசும் ஷீலாவும் அடித்தட்டு தம்பதிகளாக வாழ்ந்து இருக்கிறார்கள். சினிமா கனவை துரத்த கதை எழுதும்போதும், மனைவிக்காக கிடைத்த வேலைகளை எல்லாம் பார்க்கும்போதும், வீடு தேடி அலையும்போதும், சுயகவுரவத்தை சீண்டும் வீட்டு ஓனரிடம் சண்டைக்கு போகும்போதும் சந்தோஷ் கைதட்ட வைக்கிறார்.

ஷீலா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இன்னொரு பெரிய நம்பிக்கை. கணவனிடம் செல்ல சிணுங்கல், வீட்டு ஓனர் முன் பணிவு, வீட்டுக்குள் வந்து கோபப்படுவது, மகனை கொஞ்சுவது என்று நம் வீட்டு பெண்களை பிரதிபலிக்கிறார். தருணின் சின்ன சின்ன குறும்புகளுக்கு பின்னாலும் ஒரு அழகிய கதை இருக்கிறது.

பின்னணி இசையோ பாடல்களோ இல்லாத படத்தில் அருள் எழிலன் வீடு காண்பிக்கும் காட்சிகளும் கணவன் மனைவிக்குள் நடக்கும் காதல் காட்சிகளும் சுவாரசியமாக்குகின்றன. செழியனின் ஒளிப்பதிவும் தபஸ் நாயக்கின் ஒலிப்பதிவும் நம்மை சந்தோஷ் ஷீலா வாழ்க்கைக்குள் கூட்டி செல்கின்றன.

மிகப்பெரிய அரசியலை எளியவர்களின் வாழ்க்கையை கொண்டு வலிமையாக சொன்ன விதத்தில் உலக சினிமாக்கள் வரிசையில் டூ லெட் இடம்பெற்று இருக்கிறது.

மொத்தத்தில் ‘டூலெட்’ நடுத்தர குடும்பத்தினரின் போராட்டம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.