விஷால் அலுவலக சோதனை குறித்து வருமான வரித்துறை விளக்கம்


மெர்சல் பட பிரச்சினைக்கும் நடிகர் விஷால் அலுவலகத்தில் நடத்திய சோதனைக்கும் தொடர்பு இல்லை என்று வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

நடிகர் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான ‘மெர்சல்’ படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மத்திய அரசுக்கு எதிரான வசன காட்சிகள் அந்த படத்தில் இருப்பதாக கூறி தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

‘மெர்சல்’ படம் கருத்து சுதந்திரத்தின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டிருப்பதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருக்கும் நடிகர் விஷாலும் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தார்.

இதற்கிடையே சென்னை வடபழனியில் உள்ள நடிகர் விஷாலுக்கு சொந்தமான ‘விஷால் பிலிம் பேக்டரி’ நிறுவனத்தில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.


இதற்கு விளக்கம் தெரிவித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வருமான வரித்துறையின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரிவு, செலவை மதிப்பிட்டு வரியை கணக்கிடுவது (டி.டி.எஸ்.) குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. முறையாக வரி பிடித்தம் செய்யப்படுகிறதா? பிடித்தம் செய்யப்படும் வரி அரசு கணக்கிற்கு முறைப்படி செலுத்தப்படுகிறதா? அதில் ஏதேனும் விதிமீறல்கள் உள்ளனவா? என்பதை கண்டறியவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நடப்பு நிதி ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்த நடவடிக்கைகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை, நாங்கள் 400-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம்.

இந்த நடைமுறைகளின் போது, சென்னையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் அலுவலகம் ஒன்றில் ஆய்வு மேற்கொண்டோம்.

அந்த பட தயாரிப்பு நிறுவனம் 2016-17 நிதி ஆண்டில் வரி பிடித்தம் செய்யப்பட்டபின் செலுத்தவேண்டிய ரூ.50 லட்சம் மதிப்பிலான வரியை அரசு கணக்கில் செலுத்தவில்லை என்ற விதிமீறல் குறித்து வந்த தகவலின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வருமான வரி சட்ட விதிகளின்படி, பிடித்தம் செய்யப்பட்ட வரி, பிடித்தம் செய்யப்பட்ட மாத இறுதியில் இருந்து 7 நாட்களுக்குள் அரசு கணக்கில் செலுத்தப்பட்டு இருக்கவேண்டும். அந்த வகையில் இந்த ஆய்வின்போது, மேற்படி நபர் விதிமீறலை ஒப்புக்கொண்டு, செலுத்த வேண்டிய மொத்த தொகையையும் உடனடியாக செலுத்துவதாக உறுதியளித்தார்.


சில பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில், நாங்கள் நடத்திய ஆய்வு நடவடிக்கையை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள படத்துடன் இணைத்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்கப்பட்ட திரைப்பட தயாரிப்பாளருக்கும், அந்த படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. எங்களுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் வழக்கமாக மேற்கொள்ளும் நடவடிக்கையாகும்.

இதுபோன்ற நடவடிக்கைகள், பிற சம்பவங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது என்பதை தெளிவுபடுத்திக்கொள்கிறோம். செலவை மதிப்பிட்டு வரியை கணக்கிடுவதின்படி முறையாக வரி பிடித்தம் செய்து, அப்படி பிடித்தம் செய்யப்பட்ட வரி தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் அரசிடம் செலுத்தி, நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!