மோர்ட்டால் என்ஜின்ஸ் – சினிமா விமர்சனம்


மோர்ட்டால் என்ஜின்ஸ் திரைப்படம் வருங்கால கதை. ஒரு போரின் போது உலகத்தில் உள்ள பல பகுதிகள் அழிந்து விடுகிறது. இதில் மீதமுள்ள ஊர்களை இயந்திரமாக மாற்றி எடுத்து செல்கிறார்கள். பெரிய ஊராக இருக்கும் லண்டனை ஹுகோ வேவிங் தலைமை வகித்து வருகிறார்.

இவருடன் முக்கிய பொறுப்பில் ராபர்ட் ஷீஹன் இருந்து வருகிறார். இந்த லண்டன் ஊர் செல்லும் வழியில் இருக்கும் சிறிய ஊர்களை பிடித்து தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறார்கள். அப்படி ஹேரா ஹில்மார் இருக்கும் ஒரு ஊரை லண்டன் ஊர் அபகரிக்கிறது.

இதனால் கோபமடையும் ஹேரா ஹில்மார், ஹுகோ வேவிங்கை கொலை செய்ய முயற்சிக்கிறார். இதை பார்க்கும் ராபர்ட் ஷீஹன் அதை தடுத்து விடுகிறார். இருந்தாலும் ஹேரா ஹில்மார், ஹுகோ வேவிங்கை கத்தியால் குத்திவிட்டு, என் அம்மாவை கொலை செய்ததற்காக என்று சொல்லிவிட்டு தப்பித்து விடுகிறார்.


அப்போது ஹேரா ஹில்மாரை துரத்தி செல்லும் ராபர்ட் ஷீஹன், அவர் மூலம் ஹுகோ வேவிங் பற்றியை உண்மைகளை தெரிந்துக் கொள்கிறார். அதன்பின் கத்தியால் குத்துப்பட்ட ஹுகோ வேவிங்கிடம் இருந்து இருவரும் தப்பித்து விடுகிறார்கள்.

இருப்பினும் ஹுகோ வேவிங்கை கொலை செய்ய இருவரும் திட்டம் போடுகிறார்கள். இறுதியில் ஹுகோ வேவிங்கை ஹேரா ஹில்மார் மற்றும் ராபர்ட் ஷீஹன் இருவரும் கொலை செய்தார்களா? ஹேரா ஹில்மார் ஹுகோ வேவிங்கை கொலை செய்ய துடிக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் ஹேரா ஹில்மார் முதன்மை நாயகி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன், சென்டிமென்ட் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஹுகோ வேவிங் ஊருக்கு நல்லவராகவும் வில்லனாகவும் நடித்து மிரட்டி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.


பழி வாங்கும் கதையை நிகழ்காலத்தில் புது டெக்னாலஜியுடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கிறிஸ்டியன் ரிவர்ஸ். படத்தில் 80 சதவிகிதம் கிராபிக்ஸ் காட்சியிலேயே படமாக்கி இருக்கிறார்கள். இருப்படியும் உருவாக்க முடியுமா என்று பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்கள். ரசிகர்கள் விரும்பும் வகையில் சிறந்த பொழுதுபோக்கு படமாக உருவாக்கி இருக்கிறார்.

மொத்தத்தில் ‘மோர்ட்டால் என்ஜின்ஸ்’ சிறப்பு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!