தி நன் – சினிமா விமர்சனம்


1950-களில் நடக்கும் இந்த கதையில் ரோமானியாவின் காடு சூழ்ந்த பகுதியில் பழமை வாய்ந்த தேவாலயம் ஒன்று உள்ளது. அதில் இரு கன்னியாஸ்திரிகள் (நன்கள்) உள்ளனர். அங்கு ஏதோ ஒரு அமானுஷ்யம் இருப்பதை அவர்கள் உணர்கிறார்கள். அங்கு அமானுஷ்யம் இருப்பதை உறுதி செய்ய தேவாலயத்தின் குறிப்பிட்ட இடமொன்றில் சோதனை செய்கின்றனர். அதில் நன் ஒருவர் இறந்துவிடுகிறார்.

இதையடுத்து மற்றொருவர் அந்த தேவாலயத்தின் வாசலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறார். பைபிள் வாசகத்தின்படி தற்கொலை செய்வதென்பது பாவச் செயல். கன்னியாஸ்திரியாக இறைவனுக்காக தன்னை அர்பணித்துக் கொண்ட நன் தற்கொலை செய்து கொண்ட தகவல் வாட்டிகனில் உள்ள கிறிஸ்தவ தேவ சபைக்கு தெரிய வருகிறது.

இதையடுத்து அந்த அமைப்பில் பாதிரியாராக இருக்கும் டெமியன் பிச்சரும், கன்னியாஸ்திரியாவதற்கான பயிற்சியில் இருக்கும் நன், டெய்சா பார்மிங்காவும் அந்த தேவாலயத்துக்கு செல்கின்றனர். அமானுஷ்ய சக்தியால் அங்கு அவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வருகிறது.


கடைசியில் அந்த நன் தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன? அங்குள்ள அமானுஷ்ய சக்தியின் நோக்கம் என்ன? அந்த தேவாலயத்திற்குள் சென்ற பாதிரியார் மற்றும் நன் என்ன ஆனார்கள்? அந்த தேவாலயத்திற்குள் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

டெமியன் பிச்சர், டெய்சா பார்மிங்கா, ஜோனஸ் ப்ளோகெட் என அனைத்து கதாபாத்திரங்களும் கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.

தி கான்ஜூரிங், அனபெல் படத்தில் வரும் வாலக் கதாபாத்திரத்தை மையப்படுத்தி படத்தின் கதை நகர்கிறது. தி கான்ஜூரிங், அனபெல் படங்களில் வாலக் என்ற கதாபாத்திரம் எப்படி உருவானது என்பது பற்றி 1950-களில் நடப்பது போன்று படத்தை உருவாக்கி உள்ளனர்.


பின்னோக்கி பயணிப்பது போல் இருக்கும் கான்ஜூரிங் படத்தில் ஒரு முக்கிய பங்காற்றும் வாலக் கதாபாத்திரத்தை விவரிக்கும் பாகமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் கோரின் ஹார்டி. படத்தின் கதை தாக்கத்தை ஏற்படுத்தும்படியாக இருந்தாலும், திரைக்கதை பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். திகிலும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

அபெல் கோர்ஷெனொவஸ்கியின் பின்னணி இசை படத்திற்கு பலம். மேக்ஸிம் அலெக்சாண்டரின் ஒளிப்பதிவும் சிறப்பாக வந்துள்ளது.

மொத்தத்தில் `தி நன்’ திகில் குறைவு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!