ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப் – சினிமா விமர்சனம்


எவாஞ்சலின் லில்லியிடம் அவரது அப்பாவான மைக்கேல் டக்ளஸ் தான் ஆன்ட்மேனாக இருந்த போது மக்களை காப்பாற்றுவதற்காக ஏவுகணை ஒன்றை அழிக்க சென்றதாகவும், அப்போது வாஸ்ப்பான எவாஞ்சலினின் அம்மா அந்த விபத்தில் மாயமாகிவிட்டதாக கூறுவார். எவாஞ்சலினின் அம்மாவை மீட்கும் பாகமாக இந்த படம் உருவாகி இருக்கிறது.

கேப்டன் அமெரிக்கா சிவில் வார் படத்தில் கேப்டன் ரோஜர்ஸ் உடன் கூட்டணி வைத்ததற்காக தற்போதைய ஆன்ட்மேனாகிய பால் ருத் வீட்டுக் காவலில் வைக்கப்படுகிறார். அவருடன் அவரது பெண் குழந்தையும் அந்த வீட்டில் தங்கி வருகிறது.


வாஸ்ப் இன்னும் உயிரோடு இருப்பதாக தான் உணர்வதாக கூறும் மைக்கேல் டக்ளஸ், எவாஞ்சலினின் அம்மாவை மீட்பதற்காக ஒரு திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்கிறார். அதேநேரத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் பால் ருத்துக்கு எவாஞ்சலின் மற்றும் அவரது அம்மா பேசுவது போல் தோன்றுகிறது. இதை வாய்ஸ் மெசேஜாக மைக்கேல் டக்ளசுக்கு அனுப்பி வைக்கிறார்.

இதையடுத்து பால் ருத்துக்கு பதிலாக ஒரு எறும்பை அவரது வீட்டில் வைத்துவிட்டு, பால் ருத்தை அவர்களது உதவிக்கு அழைத்துச் செல்கிறார்கள். இதன்பின்னர் எவாஞ்சலினின் அம்மாவை மீட்க அவர்களது திட்டத்தை செயல்படுத்த திட்டமிடுகின்றனர். அதனை செயல்படுத்த ஒரு கருவி தேவைப்பட அதனை எடுத்து வர ஆன்ட்மேன் மற்றும் வாஸ்ப் செல்கின்றனர்.

அதேநேரத்தில் ஹன்னா ஜான் கமானும் அதே பொருளை எடுக்க வருகிறாள். கடைசியில் அந்த பொருளை யார் எடுத்தார்கள்? எவாஞ்சலினின் அம்மாவை காப்பாற்றினார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.


ஆன்ட்மேனாக நடித்துள்ள பால் ருத் சிறிய தோற்றம், பெரிய தோற்றம் என இரண்டிலும் கவர்கிறார். வாஸ்பாக நடித்திருக்கும் எவாஞ்சலின் லில்லி சண்டைக்காட்சிகளில் அசர வைத்திருக்கிறார். ஹன்னா ஜான் கமென், மிசசெல் பிஃப்பர், வால்டன் காகின்ஸ் என மற்ற கதாபாத்திரங்களும் படத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப பொறுப்பு வகித்துள்ளனர்.

ஆக்‌ஷன், அதிரடி, காமெடியுடன் ரசிக்கும்படியாக படத்தை இயக்கியிருக்கிறார் பெய்டன் ரீட். சிறிய தோற்றம் முதல் மாபெரும் தோற்றம் என ஆன்ட்மேனை வித்தியாசமாக காட்டியிருப்பது சிறப்பு. கிராபிக்ஸ் காட்சிகள் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. குழந்தைகளும் ரசிக்கும்படியாக படத்தை உருவாகி இருக்கிறார்கள். தமிழ் வசனங்களும் ரசிகர்களை கவர்கிறது.

கிறிஸ்டோஃபி பெக்கின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். டேன்ட்டி ஸ்பினோட்டியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படியாக சிறப்பாக வந்திருக்கிறது.

மொத்தத்தில் `ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப்’ அதிரடி.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!