தூத்துக்குடி துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு நடிகர்கள் கண்டனக் குரல்..!!


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடந்து 12 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.

இதனை நடிகர், நடிகைகள் கண்டித்து அறிக்கை வெளியிட்டும், டுவிட்டரில் பதிவிட்டும் வருகிறார்கள். அதன் விவரம்:-

சூர்யா:-

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 25 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் போராடுகிறார்கள். இந்த ஆலையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு நடந்த மக்கள் போராட்டம் உயிர் பலிகளை சந்தித்து இருப்பது குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. பாதிப்புகள் அதிகரிக்கும்போது போராடுவதுதான் ஒரே வழி. இனியும் இதுபோன்ற இழப்புகளை சகித்துக்கொள்ள முடியாது.


கார்த்தி:-

எவ்வித அரசியல் தலையீடுகளுக்கும் இடம் கொடுக்காமல் தன்னெழுச்சியாக திரண்ட மக்களை கொஞ்சமும் ஈவு இரக்கமற்று சுட்டுக்கொன்றிருப்பது நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்கிற கேள்வியை எழுப்பி இருக்கிறது. மக்களை காப்பதுதான் காவல் துறை கடமை. அவர்களே அப்பாவி மக்களை கொன்று இருப்பது எந்த விதத்தில் நியாயம். மனசாட்சி கொண்ட எவருடையை மனதையும் உலுக்க கூடிய கொடூரத்தை அரசே செய்து இருப்பது மன்னிக்க முடியாதது. உயிர்விட்ட அத்தனை பேர் தியாகத்தையும் நாளைய வரலாறு நினைவில் வைத்திருக்கும்.

சத்யராஜ்:-

தூத்துக்குடியில் நடந்த சம்பவத்துக்கு எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன். இறந்தவர்கள் அத்தனை பேர் குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கல். ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும். எங்கோ வாழும் ஒரு முதலாளி முக்கியமா? இங்கே வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும், தமிழ்நாட்டு மக்களும் முக்கியமா? நடந்துள்ள சம்பவம் நெஞ்சை பதைக்க வைக்கிறது.

தனுஷ்:-

ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடும் மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இப்படி ஒரு சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். உயிரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.


ஜெயம் ரவி:-

ஒரு உயிரை எடுக்க இன்னொருவருக்கு யார் உரிமை கொடுத்தார்கள். அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட இந்த சம்பவத்துக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

விஜய் சேதுபதி:-

“சட்டமோ, அரசாங்கமோ எவையும் மக்களின் நலன் பாதுகாக்க வேண்டியவையே. மக்களின் உயிர் கொல்லியாக மாறினால் எதற்கு ஒரு அரசாங்கம்? கடைசி தமிழனின் ரத்தம் எழும் வீழாது”

சித்தார்த்:-


தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் பலியான உயிர்கள் அரசை பழிவாங்கும். தமிழக வரலாற்றில் இது கருப்பு தினம். உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபம்.

பிரகாஷ்ராஜ்:-

போராடிய சொந்த மக்களையே கொன்றுள்ளனர். இதற்காக தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும். முதுகெலும்பு இல்லாத அரசு. போராட்டம் நடத்தும் மக்களின் அழுகுரல் அரசுக்கு கேட்கவில்லையா. மக்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து அச்சத்தில் உள்ளனர். ஆனால் அரசோ ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் இசைக்கு ஏற்றாற்போல் நடனமாடி கொண்டு இருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!