பாடம் – சினிமா விமர்சனம்


போலீஸ் அதிகாரி நாகேந்திரன் தன்னால் ஆங்கிலம் பேச முடியவில்லை என்ற ஏக்கத்தில், தனது மகனை ஆங்கிலம் பேச வைக்க முயற்சி செய்கிறார். ஆனால் அப்பாவைப் போலவே மகன் ஜீவாவுக்கும் ஆங்கிலம் என்றாலே ஆகாது. தமிழ் தெரியாத உயர் அதிகாரியிடம் மாட்டிக் கொண்டு சிக்கித் தவித்த நாகேந்திரன் கிராமத்தில் இருந்து சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆகிறார்.

சென்னை செல்லும் உற்சாகத்தில் இருக்கும் ஜீவாவை சிபிஎஸ்இ பள்ளியில் சேர்த்து விடுகிறார் நாகேந்திரன். கிராமத்தில் ஆங்கிலத்தை ஒரு பாடமாக படித்த ஜீவா, சிபிஎஸ்இ பள்ளியில் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசி, ஆங்கிலம் படிக்க திண்டாடுகிறான். இதையடுத்து அந்த பள்ளியில் இருந்து எப்படியாவது வெளியே வர வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் இறங்குகிறான் ஜீவா.

ஜீவாவின் முயற்சிகள் அனைத்தும், அவனுக்கு எதிராக திரும்பியும், ஒரு கட்டத்தில் அந்த பள்ளியில் இருந்து வெளியேறியும் விடுகிறார். இதையடுத்து மீண்டும் அவரை அதே பள்ளியிலேயே சேர்த்து விட நாகேந்திரன் முயற்சி செய்ய, மாநில அளவிலான ஆங்கில பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் தான் ஜீவாவை பள்ளியில் சேர்த்துக் கொள்வோம் என்று பள்ளி நிர்வாகம் கூறிவிடுகிறது.

ஆங்கிலம் என்றாலே அலறும் ஜீவா கடைசியில் அந்த பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றாரா? தனது அப்பாவின் ஆசையை நிறைவேற்றினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.


போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நாகேந்திரன் ஆங்கிலம் தெரியாமல் வெகுளியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தனக்கு தான் ஆங்கிலம் வரவில்லை, தனது மகனாவது ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று ஏங்குவது ஏற்கும்படியாக இருக்கிறது. ஆங்கிலம் என்றாலே அலர்ஜி என்னும் கதாபாத்திரத்தில் வரும் ஜீவாவின் வசனங்கள், பேச்சு ஒரு சில இடங்களில் ரசிக்கும்படியாக இருக்கிறது.

ஜாங்கிரி மதுமிதாவை அடை தேனடை, ஒத்த ரோசா உள்ளிட்ட கதாபாத்திரத்தில் பார்த்துவிட்டு, அம்மாவாக காட்டியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவருக்கும் அது அவ்வளவாக பொருந்தவில்லை. யாஷிகா ஆனந்த் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை ஓரளவுக்கு பூர்த்தி செய்கிறார். இவர் தான் வில்லனா என்று யோசிக்கும் அளவுக்கு ஆசிரியர் விஜித்தையே வில்லனாக காட்டியிருப்பது செட்டாகவில்லையோ என்று யோசிக்கும்படியாக இருக்கிறது.

குழந்தைகளை வைத்து வித்தியாசமாக படம் எடுக்க முயற்சி செய்திருக்கும் இயக்குநர் ராஜசேகர், அதனை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்கும் விதத்தில் வெற்றி பெறவில்லை என்று தான் கூற வேண்டும். அனைவரும் ரசிப்பார்கள் என்று அதீத நம்பிக்கையுடன் படத்தை உருவாக்கியிருந்தாலும், திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆங்கிலத்துக்கு எதிரான கதைக்களத்தில் ஆரம்பித்து ஆங்கிலம் தான் என்று கதையை முடிப்பது வித்தியாசமாக இருக்கிறது.

கணேஷ் ராகவேந்திராவின் பின்னணி இசை ஒரளவு படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. எஸ்.எஸ்.மனோவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

மொத்தத்தில் `பாடம்’ பார்க்க முடியவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!