கலைஞர்களுக்கு நல்ல உணவு கொடுப்பதில் உறுதியாக இருந்தேன்- டோனி

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘எல்.ஜி.எம்’ படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் டோனி, அவரது மனைவி சாக்ஷி சிங் டோனி, ஹரிஷ் கல்யாண், யுவனா, யோகி பாபு மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் டோனி பேசியதாவது, “என்னுடைய டெஸ்ட் அறிமுகம் இங்கே சென்னையில்தான் நடந்தது. என்னுடைய அதிகபட்ச ஸ்கோரை சென்னையில்தான் ஸ்கோர் செய்தேன். ஐ.பி.எல். போட்டி நடந்த போது என்னை தமிழகம் தத்தெடுத்தது.

தன் மனைவி எப்போதெல்லாம் எனக்கு ஒரு ஐடியா தோன்றுகிறது என்று கூறுகிறாளோ அப்போது கணவன் பயப்படுகிறான், இதுதான் எல்.ஜி.எம். இரண்டு பெண்களுக்கு நடுவே ஹரீஷ் கல்யாண் ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார். சாண்ட்விச்சுக்கு நடுவே சிக்கியதை போலத்தான் இருந்தது ஹரீஷின் நிலைமை. நான் சாக்ஷியிடன் ஒரு விஷயம் தான் கூறினேன். இது வீடு கட்டுவது போன்றது அல்ல கதைக்களம் முடிவு செய்து நடிகர்களை தேடுவது. ஒரு தடவை நீங்கள் முடிவு செய்துவிட்டால் முழுமையாக ஈடுபடுங்கள் என்று கூறினேன்.

இந்தத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிப் பட வேலைகளில் இறங்கிய போது ஒன்றே ஒன்றை மட்டும் உறுதியாகச் சொன்னேன். கிரிக்கெட் ஆடும்போது நாங்கள் நல்ல உணவைத்தான் எதிர்பார்ப்போம். அதுபோல இங்கேயும் எல்லாருக்கும் முறையான நல்ல சாப்பாட்டைக் கொடுக்கச் சொன்னோம். நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உட்படக் குழுவில் உள்ள அனைவருக்கும் நல்ல உணவைக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன் என்று கூறினார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!