முந்தல் – சினிமா விமர்சனம்


நாயகன் அப்பு கிருஷ்ணா அவரது தாத்தா வி.எஸ்.ராகவனுடன் ராமேஸ்வரத்தில் வாழ்ந்து வருகிறார். தற்காப்பு கலைகள் பலவற்றை கற்றுவைத்துள்ள அப்பு கிருஷ்ணா அங்குள்ள சிலருக்கு அந்த கலைகளை கற்றுக் கொடுத்து வருகிறார். சித்த மருத்துவரான வி.எஸ்.ராகவன் ஓலைச்சுவடியில் எழுதியிருக்கும் முறையை வைத்து புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறார். அப்பு கிருஷ்ணா, ஆழ்கடலுக்கு சென்று மருந்து கண்டுபிடிக்க தேவையானவற்றை கொண்டு வருகிறார்.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு புற்றுநோய்க்கான மருந்தை வி.எஸ்.ராகவன் கண்டுபிடிக்கிறார். பின்னர் அந்த மருந்தை புற்றுநோய் பாதிப்புள்ள ஒருவரிடம் சோதனை செய்ய, அதில் வெற்றியும் காண்கிறார். இந்த தகவல் உள்ளூர் மருத்துவர் ஒருவர் மூலம் சென்னையில் இருக்கும் விஞ்ஞானி நிழல்கள் ரவிக்கு தெரிய வருகிறது.

இதையடுத்து ராமேஸ்வரம் வரும் நிழல்கள் ரவி, அந்த மருந்து கண்டுபிடிக்கும் முறையை தன்னிடம் கொடுக்கும்படியும், அதை வைத்து நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்றும் கூறுகிறார். அப்படி கொடுக்கும் பட்சத்தில் ஏழை எளிய மக்களுக்கு அந்த மருந்து கிடைக்காமல் போய்விடும் என்பதால் நிழல்கள் ரவியிடம் அந்த மருந்தை தர மறுக்கிறார் வி.எஸ்.ராகவன்.


இதையடுத்து நிழல்கள் ரவி தூண்டுதலின் பேரில், உள்ளூர் ரவுடியான மொட்டை ராஜேந்திரன் அந்த ஓலைச்சுவடியை எடுக்க வருகிறார். இந்நிலையில், அப்பு கிருஷ்ணா தற்காப்பு கலையில் சிறந்தவர் என்பது தெரிந்து பின்வாங்குகிறார். புற்றுநோய் தடுப்பு மருந்து அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளுக்கு செல்கிறார்.

கடைசியில், அந்த மருந்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இலவசமாக கிடைத்ததா? நிழல்கள் ரவி அதனை திட்டம்போட்டு அடைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

தற்காப்பு கலையில் கலக்கும் அப்பு கிருஷ்ணா நடிப்பில் கவரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அவரது நடிப்பும், வசன உச்சரிப்பும் சுமார் தான். ஸ்டண்ட் காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகி முக்‌ஷா சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்கிறார். வி.எஸ்.ராகவன், நிழல்கள் ரவி முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றர். மொட்டை ராஜேந்திரன் ஒருசிலகாட்சிகளில் வந்து செல்கிறார்.

புற்று நோயை முற்றிலுமாக குணப்படுத்த கூடிய மருந்துகளை நமது முன்னோர்கள் கண்டுபிடித்து விட்டாலும், வியாபார நோக்கில் அதனை சிலர் மறைத்து வைத்துவிட்டதாகவும், அப்படி மறைக்கப்பட்ட ஒரு அபூர்வ மருந்தை தேடி நாயகன் செல்வது போலவும், அதே மருந்துக்காக பலரும் பயணிக்கும்படியாக கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஜெயந்த். படத்தின் கதை ஏற்கும்படியாக இருந்தாலும் நாயகன் மற்றும் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் நீளம் அதிகமாக இருப்பது ரசிகர்களை கடுப்படைய வைக்கிறது.

கே.ஜெய்கிருஷ் இசையில் பாடல்கள், பின்னணி இசை சுமார் ரகம் தான். ராஜா ஒளிப்பதிவில் காட்சிகள் ஓரளவுக்கு சிறப்பாக வந்துள்ளது.

மொத்தத்தில் `முந்தல்’ நீட்சி.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி