‘போர் தொழில்’ இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த நடிகர் அசோக் செல்வன்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் தற்போது ‘போர் தொழில்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றதைத்தொடந்து இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையடுத்து ‘போர் தொழில்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்டின் பிரமோத் செருவய்யா, சுனில் சாய்னானி, E4 எக்ஸ்பிரிமென்ட்ஸின் முகேஷ் மேத்தா, எப்ரியாஸ் ஸ்டுடியோஸைச் சேர்ந்த சந்தீப் மெஹ்ரா, விநியோகஸ்தர் சக்திவேலன், இயக்குனர் விக்னேஷ் ராஜா, ஒளிப்பதிவாளர் கலைச்செல்வம் சிவாஜி, இணை கதாசிரியர் ஆல்பிரட் பிரகாஷ், நடிகர்கள் ஆர். சரத்குமார், அசோக் செல்வன், நடிகை நிகிலா விமல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில், நடிகர் அசோக் செல்வன் பேசியதாவது, ” எனக்கும் மிகவும் பிடித்த திரைக்கதை இது. 2015 ஆம் ஆண்டில் இப்படத்தில் மூலக்கதை குறித்து நானும், நண்பரான இயக்குனர் விக்னேஷும் விவாதித்திருக்கிறோம். இயக்குனருடன் கல்லூரி காலக்கட்டத்திலிருந்து ஏராளமான குறும் படங்களிலும் விளம்பர படங்களிலும் பணியாற்றிருக்கிறேன். மிகத் திறமையான படைப்பாளி, கடும் உழைப்பாளி. விக்னேஷ் ஒரு கதையை சொன்னால் நன்றாக இருக்கும். அதுவும் இந்த திரைக்கதை வித்தியாசமாக இருந்தது. இதுவரை ஏராளமான க்ரைம் திரில்லர் திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. மர்டர் மிஸ்டரி ஜானரிலான திரைப்படங்களும் வெளியாகியிருக்கிறது. ஆனால் இந்த திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் தோன்றும் காவல் துறை உயரதிகாரி போல் மீசையை வைத்து நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால் இந்த திரைப்படத்தில் காவலர் என்றால் மீசை இருக்க வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பி, மீசை இல்லாத காவலராக நடித்திருக்கிறேன். இதற்கு நேர் எதிராக கரடு முரடான தோற்றத்தில் மூத்த காவல் அதிகாரியாக சரத்குமார் நடித்திருக்கிறார். காவல்துறையில் பயிற்சிகளை முடித்துவிட்டு கள அனுபவம் இல்லாத ஒரு இளம் காவலரும், கள அனுபவம் அதிகம் உள்ள மூத்த காவல் அதிகாரியும் எப்படி ஒருங்கிணைந்து பணியாற்றுகிறார்கள்? இவர்கள் இருவரும் இணைந்து எப்படி ஒரு கொலை குற்றவாளியை கண்டுபிடிக்கிறார்கள்? என்பது தான் படத்தின் கதை.

இயக்குனரின் கற்பனையை எப்படி சாத்தியப்படுத்தப்போகிறோம் என எண்ணினேன். என்னுடன் அனுபவம் மிக்க சரத்குமார் இணைந்து நடிக்கும் பொழுது அது எளிதாக இருந்தது. சரத்குமாருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இதற்கு முன்னர் அனுபவமிக்க நாசர் அவர்களுடனும் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்திலும் அவருடைய பழகும் விதத்தை கண்டு வியந்திருக்கிறேன். அவரை சந்திக்க சினிமா, அரசியல் என பல்வேறு துறைகளை சார்ந்த நபர்கள் வருகை தந்து கொண்டிருப்பர். அவர் எப்போதுமே பரபரப்பாகவே இருப்பார். இந்த வயதிலும் மதிய உணவாக சூப்பை அருந்துகிறார். அதன் பிறகு சத்தான உணவுகளை சாப்பிடுவார். இது, அவரைப் போல் இருக்க வேண்டும் என்ற உத்வேகத்தை எனக்குள் உருவாக்கியது. அவருடன் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. குறிப்பாக ‘போர் தொழில் 2’ வில் நடிக்க விருப்பம்.

நடிகை நிகிலா விமலுடன் இணைந்து பணியாற்றியதும் மறக்க இயலாத அனுபவம். அவர் இந்த படத்தின் திரைக்கதையில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். எனக்கு காதலியாக நடிக்கவில்லை. அதில் சின்ன வருத்தம் இருக்கிறது. படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் திறமையானவர்கள்.

என்னுடைய சொந்த கருத்தை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றால், இயக்குனர் விக்னேஷ் ராஜா எதிர்காலத்தில் இந்திய அளவில் பிரபலமான இயக்குனராக உயர்வார். இதை நான் நண்பர் என்பதால் மிகைப்படுத்தி சொல்லவில்லை. அவருடைய திறமையை இந்த ‘போர் தொழில்’ படம் வெளிப்படுத்தும். ‘தெகிடி’ படத்திற்குப் பிறகு எனக்கு கிடைத்த அற்புதமான திரைக்கதை இந்த ‘போர் தொழில்’ படம். திரில்லர் ஜானரிலான படத்தை பார்த்து ரசிப்பவர்களுக்கு இந்த ‘போர் தொழில்’ படம் நிச்சயம் பிடிக்கும்” என்றார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!