காத்தாடி – சினிமா விமர்சனம்


நாயகன் அவிஷேக் கார்த்திக்கும், டேனியலும் நண்பர்கள். சிறிய அளவில் திருட்டுத் தொழில் செய்து தங்களது பிழைப்பை பார்த்து வருகின்றனர். இப்படி இருக்கையில், பெரிய அளவில் ஒரு பணம் சம்பாதிக்க முடிவு செய்து, சம்பத்துடன் காரில் வரும் பேபி சாதன்யாலை பார்க்கின்றனர். இதையடுத்து சாதன்யாவை கடத்தி, சம்பத்திடம் பணம் கேட்க முடிவு செய்து, சாதன்யாவையும் கடத்தி செல்கின்றனர்.

பின்னர் சம்பத்திடம் பணம் கேட்க, சம்பத்தும் பணம் தர சம்மதிக்கிறார். இந்நிலையில், போலீஸ் உடையில் அங்கு வரும் தன்ஷிகா, இவர்கள் இருவர் மீதும் சந்தேகப்பட்டு அவர்களை விசாரிக்கிறார். அப்போது அவர்கள் சாதன்யாவை கடத்தி வந்தது தெரிகிறது. இந்நிலையில், காவல்துறை அதிகாரிகள் அங்கு வர, தன்ஷிகா அங்கிருந்து தப்ப முயற்சிக்கிறார். அப்போது தான் தன்ஷிகா உண்மையான போலீஸ் இல்லை என்பது அவிஷேக், டேனியலுக்கு தெரிய வருகிறது.


தன்ஷிகா போலீசில் இருந்து தப்பிக்கும் நிலையில், சம்பத் தனது அப்பா இல்லை என்ற உண்மையை பேபி சாதன்யா கூறுகிறாள். கடைசியில் சாதன்யா யார்? சாதன்யாவை நாயகன் சம்பத்திடம் ஒப்படைத்தாரா? தன்ஷிகா யார்? தன்ஷிகாவை ஏன் போலீஸ் துரத்தியது? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் அவிஷேக் கார்த்திக் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். குறிப்பாக அவிஷேக்கும், டேனியலும் இணையும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. டேனியல் காமெடியில் நல்லவே ஸ்கோர் செய்திருக்கிறார். தன்ஷிகா அவரது வழக்கமான நடிப்பால் கவர்கிறார். போலீசாக வந்து மிரட்டும் காட்சியிலும், அவருக்கு நடக்கும் இன்னல்கள் அடங்கிய காட்சியிலும் அவரது நடிப்பு சிறப்பு. சம்பத் அமைதியான வில்லனாக மிரட்டியிருக்கிறார். காளி வெங்கட், ஜான் விஜய், மனோ பாலா, மொட்டை ராஜேந்திரன் என அனைவருமே கதையின் போக்குக்கு வலுசேர்த்திருக்கின்றனர்.


திருட்டு தொழில் செய்து வரும் நாயகன், திடீரென பெரிய திருட்டு செய்து செட்டிலாக நினைத்து ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார். அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதை கதைக்களமாக கொண்டு படத்தை இயக்கி இருக்கிறார் எஸ்.கல்யாண். படத்தில் கதாபாத்திரங்கள் அனைவரையும் நல்ல வேலை வாங்கியிருக்கிறார். திருட்டு, காமெடி என கலகலப்பாக்க படத்தை எடுக்க முயற்சி செய்திருக்கிறார். அவரது முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

தீபன்.பி-யின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறது. ஆர்.பவண் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.

மொத்தத்தில் `காத்தாடி’ வேகம் குறைவு.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி