பாகமதி – சினிமா விமர்சனம்


மாநில அரசுக்கு சொந்தமான சாமி சிலைகள் கடத்தப்படுகின்றன. மாநில அரசு இதனை கண்டுபிடிக்காவிட்டால் தான் பதவி விலகுவேன் என்று அறிவிக்கிறார் மத்திய அமைச்சர் ஜெயராம். இதையடுத்து இவரை, அரசியலை விட்டே ஓடவிடவேண்டும் என்று திட்டம் தீட்டுகிறார் மாநில முதலமைச்சர். ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஆஷா சரத்தை அதற்காக பயன்படுத்துகிறார்.

கரைபடியா கரத்துடன் மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையுடன் இருக்கும் ஜெயராம் மீது குற்றம் சுமத்த போதிய சாட்சியங்கள் இல்லாததால், ஜெயராம் நிர்வாகத்தில் பணிபுரிந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அனுஷ்காவை, ஜெயராமுக்கு எதிராக திருப்பிவிட திட்டம் தீட்டுகின்றனர்.

அனுஷ்கா, அவரது காதலரான உன்னி முகுந்தனை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், அனுஷ்காவை ஆள்நடமாட்டம் இல்லாத பாகமதி பங்களாவில் வைத்து விசாரிக்கின்றனர்.


முதலில் யாரோ தன்னை பயமுறுத்துவது போன்று உணரும் அனுஷ்கா. ஒரு சில நாட்களில் தான் பாகமதி என்றும், பாகமதியின் உடைகளை எடுத்து போட்டுக் கொண்டும் அங்குள்ளவர்களை மிரட்டுகிறார். அவர்களை டார்ச்சர் செய்கிறார்.

கடைசியில் அங்கு என்ன நடந்தது? பாகமதிக்கும், அனுஷ்காவுக்கும் என்ன சம்பந்தம்? உண்மையிலேயே அங்கு பாகமதி என்று அமானுஷ்ய சக்தி ஏதேனும் இருந்ததா? உன்னி முகுந்தனை கொன்றது யார்? பாகமதி பங்களாவுக்குள் சென்றவர்கள் என்ன ஆனார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

தென்னிந்திய சினிமாவிலேயே அதிக வரலாற்று படங்களில் நடித்துள்ள அனுஷ்கா, பாகமதி படத்திலும் அவரது கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்திருக்கிறார். ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும், பாகமதியாகவும் அவர் சரியாக பொருந்தியிருக்கிறார். உன்னி முகுந்தன் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.


ஜெயராம் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆஷா சரத், முரளி கிருஷ்ணா, தன்ராஜ் சுக்ராம், பிரபாஸ் ஸ்ரீனு, தலைவாசல் விஜய் கொடுத்த கதபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கின்றனர்.

பாகமதி என்பது யார்? பாகமதி என்ற கதாபாத்திரத்தை வைத்து ஆக்‌ஷன், வரலாறு, திகில் என அனைத்தும் கலந்து கொடுத்திருக்கிறார் ஜி.அசோக். படத்தில் திகில் காட்சிகள் திருப்திபடுத்தும்படி இருக்கின்றன. எனினும் படத்தின் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி ரசிகர்களுக்கு முழு விருந்தளிக்கும் விதமாக உருவாக்கியிருக்கலாம்.

எஸ்.தமனின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பாடல்களும் கேட்கும் ரகம் தான். ஆர்.மதியின் ஒளிப்பதிவில் காட்சிகள் அட்டகாசமாக வந்திருக்கிறது.

மொத்தத்தில் `பாகமதி’ பார்க்கலாம். -Source: Maalaimalar

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி