இளைஞர்களுக்காகதான் முனைவர் பட்டம் பெற்றேன்- ஆதி

இசையமைப்பாளர், ராப் பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை-2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்ஷன் உள்பட பல படங்களுக்கு இசைமைத்துள்ளார். இதனிடையே மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘வீரன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஹிப்ஹாப் ஆதி மேலாண்மை பிரிவில் இசை தொழில் முனைவோர் என்பதை மையமாக வைத்து பி.எச்.டி. ஆராய்ச்சி படித்து முடித்துள்ளார். இந்நிலையில், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற 38-வது பட்டமளிப்பு விழாவில் ஹிப்ஹாப் ஆதிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி முனைவர் பட்டத்தை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த ஹிப்ஹாப் ஆதி, “சென்னையை மையமாக வைத்து இளைஞர்கள், மாணவர்களுக்கு என மியூசிக்கல் அகாடமி திறக்க உள்ளேன். இதற்காக தான் ஆராய்ச்சி படித்து பட்டம் பெற்றேன். தற்போது, பி.டி மாஸ்டர் என்ற திரைப்படத்தில் உடற்கல்வி ஆசிரியராக நடித்து வருகிறேன். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது” என்று பேசினார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!