அரசியல் காரணங்களால் சில விஷயங்கள் புதிதாக இருக்கிறது- ஏ.ஆர்.ரகுமான்

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் தன் இசையால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் பல மொழி படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் அவரது 50-வது படத்திற்கு ஏ.ஆர்.இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சமீபத்தில் தனியார் யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த ஏ.ஆர்.ரகுமான் தான் மதம் மாறியது குறித்து பேசியுள்ளார். அதில், “என் அப்பா கடைசி காலத்தில் போராடிக் கொண்டிருந்த போது பல குருக்களை சந்தித்தோம். கடைசியாக சூஃபி ஆன்மிக குருவை சந்தித்தோம். அப்போது அவர் பத்து வருடங்களுக்கு பின் நீ மீண்டு வருவாய் என்று கூறினார்.

பத்து வருடங்களுக்கு பின் ஒருநாள் ஸ்டூடியோவில் இருந்து உபகரணங்களை எடுத்து செல்லும் போது சுங்கவரித் துறை அதிகாரிகள் எங்களிடம் கடும் சோதனை நடத்தினர். அப்போது அதில் இருந்த மதகுருவின் மாணவர் ஒருவர் எங்களுக்கு உதவினார். தொடர்ந்து நாங்கள் மீண்டும் அந்த சூஃபியை சந்திக்க சென்றோம். அவர் என்னுடைய ஸ்டூடியோவை ஆசீர்வதித்தார். பின்னர் வாழ்க்கையில் எல்லாம் மாற ஆரம்பித்தது.

யாருமே நீங்கள் இந்த நம்பிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என எங்களிடம் சொல்லவில்லை. நாங்களாக தான் இந்த நம்பிக்கையை கடைபிடித்தோம். நான் இஸ்லாமிய மதத்திற்கு மாறியபோது எந்தவித சமூகம் சார்ந்த அழுத்தத்தையும் எதிர்கொள்ளவில்லை. இந்தியர்கள் பெரும்பாலும் வெளிப்படையானவர்கள். குறிப்பாக தென்னிந்திய மக்கள் மிகவும் வெளிப்படையானவர்கள்; அனைவரையும் அரவணைத்து ‘வாழு வாழ விடு’ என்ற கோட்பாட்டின்படி மகிழ்ச்சியுடன் வாழ்பவர்கள். கடந்த சில வருடங்களாக அரசியல் காரணங்களால் சில விஷயங்கள் புதிதாக இருக்கிறது என நினைக்கிறேன்” என்றார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!