சத்திய சோதனை – விமர்சனம்

பிரேம் ஜி தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை தீவிரமாக காதலிக்கிறார். ஒரு நாள் தன் காதலியை பார்பதற்காக செல்லும் வழியில் பிணம் கிடப்பதை பார்க்கிறார். இறந்து கிடக்கும் அந்த நபரை பிரேம் ஜி ஓரமாக படுக்க வைத்து விட்டு அவர் அணிந்திருக்கும் ஒரு செயின், வாட்ச் மற்றும் செல்போனை பாக்கெட்டில் வைத்து கொண்டு ஊர் எல்லையில் இருக்கும் ஒரு காவல் நிலையம் செல்கிறார்.  

இதனிடையே கொலை செய்தவர்கள் ஊரின் எல்லையில் இருக்கும் மற்றொரு காவல் நிலையத்தில் சரணடைந்து விடவே இந்த கொலையை விசாரிக்க போலீஸ் சம்பவ இடத்திற்கு வருகின்றனர். அப்போது அவர் அணிந்திருந்த நகைகள் இல்லை என்பதால் ஊர் எல்லையில் இருக்கும் மற்றொரு காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்கின்றனர்.   இதனால் இரு காவல் நிலைய அதிகாரிகளுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது.

அவர் அணிந்திருந்த மற்ற நகைகளை யார் எடுத்திருப்பார்கள் என்று போலீசார் தேடுகின்றனர். நகைகளை அபகரிக்க திட்டமிடும் இரு காவல் நிலைய போலீசிடம் பிரேம் ஜி சிக்கிக் கொள்கிறார்.   இறுதியில் பிரேம் ஜி என்ன ஆனார்? யார் அந்த நகைகளை திருடியது? போலீசிடம் இருந்து பிரேம் ஜி எப்படி தப்பித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

பிரேம் ஜி தனது வெகுளியான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்கிறார். வெள்ளந்தியான இவரின் நடிப்பு கைத்தட்டல் பெற வைக்கிறது. இவரின் இயல்பான நடிப்பு கவனம் ஈர்க்கிறது. லக்‌ஷ்மி, சௌமியா சித்தா, ரேஷ்மா பசுபல்டி, ஞான சம்பந்தம், கே.ஜி.மோகன் என பலரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.   ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா, காமெடி கலந்த படத்தை எடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

எதார்த்தமான சிறு கதையை தேர்ந்தெடுத்து அதனை திரைக்கதையின் மூலம் சுவாரசியப்படுத்தியுள்ளார். இரண்டாம் பாதியில் வரும் காமெடி காட்சிகள் பல இடங்களில் கைத்தட்டல் பெறுகிறது. படத்தின் கதாப்பாத்திர தேர்வும், கதாப்பாத்திர வடிவமைப்பும் சிறப்பாக கையாண்டுள்ளார்.   ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவு படத்தின் பலம். பாடல் மற்றும் பின்னணி இசை மூலம் படத்தை விறுவிறுப்பாக்கியுள்ளனர் ரகுராம் மற்றும் தீபன் சக்கரவர்த்தி மொத்தத்தில் சத்திய சோதனை – வென்றது


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!