டிஐஜி விஜயகுமார் முடிவு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்- விஷால் இரங்கல்

கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணியாற்றியவர் விஜயகுமார். 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்ச்சி பெற்ற இவர் சென்னை அண்ணாநகரில் துணை கமிஷனராக பணியாற்றினார். அப்போதுதான் பதவி உயர்வு பெற்று கோவை சரக டி.ஐ.ஜி. ஆனார். கடந்த ஜனவரி மாதம் 6-ந்தேதி கோவையில் பதவியேற்று பணியில் ஈடுபட்டு வந்தார்.

டி.ஐ.ஜி. அலுவலகம் கோவை ரேஸ்கோர்ஸ் ரெட்பீல்டு பகுதியில் செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் முகாம் அலுவலகமும் (வீடு) உள்ளது. இங்குதான் டி.ஐ.ஜி. விஜயகுமார் தனது குடும்பத்தினருடனேயே தங்கி இருந்தார். இவர் இன்று காலை நடைபயிற்சி முடித்துவிட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது மெய் பாதுகாவலர் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பான விசாரணையில் டி.ஐ.ஜி. விஜயகுமார் கடந்த இரண்டு நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக தூக்கமின்மைக்காக மாத்திரை பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஷால், டி.ஐ.ஜி. விஜயகுமாருக்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டார் என்பது வருத்தமளிக்கிறது. இது அனைவருக்கும் மிகவும் அதிர்ச்சியான செய்தி. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நான் அவரை பல முறை சந்தித்துள்ளேன். அவரது கடைசி முடிவு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

டி.ஐ.ஜி. விஜயகுமார் இறுதிச்சடங்குகள் தேனியில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!