மன்னிப்பு கோரினார் நடிகர் எஸ்.வி.சேகர்

பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திய வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் நடிகர் எஸ்.வி.சேகர்.

நடிகர் எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து ‘முகநூல்’ பக்கத்தில் அவதூறு தகவல் பதிவிட்டதாக அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு ‘சைபர் கிரைம்’ போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். அதில், இந்த விவகாரம் குறித்து மன்னிப்பு கேட்டுவிட்டதாகவும், அமெரிக்கவாழ் தமிழர் முகநூலில் பதிவிட்டிருந்த கருத்தையே பகிர்ந்ததாகவும் தெரிவித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு எஸ்.வி.சேகர் ஏப்ரல் 2-ந் தேதி நேரில் ஆஜராகி, பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி முகநூலில் எழுதிய அமெரிக்கவாழ் தமிழர் குறித்த தகவலை தெரிவிக்க வேண்டும்’ என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதன்பேரில், எஸ்.வி.சேகர் சமீபத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு ‘சைபர் கிரைம்’ போலீசார் முன்பு ஆஜராகி இருந்தார். இந்நிலையில் பெண் பத்திரிகையாளர் குறித்து சமூக வலைத்தளங்களில் இழிவாக பதிவிட்ட விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் நடிகர் எஸ்.வி.சேகர். 4 புகார்கள் மீதான வழக்குகளிலும் தனித்தனி பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!