முண்டாசுப்பட்டி படம் போன்று ஒரு குழுவாகச் சேர்ந்து உருவாக்கியுள்ளோம்- முனீஸ்காந்த்

அறிமுக இயக்குனர் ராஜா குருசாமி இயக்கத்தில், முனீஸ்காந்த், காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, கிராமத்துக் கரகாட்ட கலையின் பின்னணியில், மண் மணக்கும் காவியமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘காடப்புறா கலைக்குழு’. சக்தி சினி புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட் சார்பில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில், நடிகர் முனிஸ்காந்த் பேசியதாவது, இந்த படம் முண்டாசுப்பட்டி படம் போன்று ஒரு குழுவாகச் சேர்ந்து உருவாக்கியுள்ளோம். அனைவரும் இணைந்து கலகலப்பாகப் படப்பிடிப்பை நடத்தினோம். இயக்குனர் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார். இந்த படத்தின் மீது மிகவும் நம்பிக்கை வைத்து இரவு பகல் பாராமல் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். இப்படி ஒரு கலைப் படைப்பை உருவாக்கியுள்ள தயாரிப்பாளருக்கு நன்றி. நான் இந்த படத்தில் கரகாட்டம் ஆட முயற்சி செய்துள்ளேன். அது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. படம் கண்டிப்பாக வெற்றியடையும் வாழ்த்துகள் என்று பேசினார்.

இதைத்தொடர்ந்து நடிகர் காளி வெங்கட் பேசியதாவது, எனக்கு இது மிக முக்கியமான படம், இயக்குனர் குறும்படம் எடுத்த காலத்திலிருந்தே எனக்குப் பழக்கம். ராஜா குருசாமி எனக்கு நெருங்கிய நண்பர். அவர் படம் செய்தது எனக்கு மகிழ்ச்சி. அவருக்குப் படம் தந்ததற்காகத் தயாரிப்பாளருக்கு நன்றி. தயாரிப்பாளர் புரொடக்ஷனில் தேவைப்படும் அத்தனையும் வாங்கி வைத்து விட்டார். கண்டிப்பாகத் தொடர்ந்து படம் எடுப்பார், அவருக்கு வாழ்த்துக்கள். ஹென்றி மிக எளிமையாக அனைவருக்கும் பிடிக்கும் படி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் முனீஷ்காந்த் ஆடியதை வீடியோவில் பார்த்தேன் அவருடன் தொடர்ந்து பணியாற்றுவது மிக மகிழ்ச்சி. லோகேஷனில் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்தார்கள் அவர்களுக்கு நன்றி. தனுஷ் சார் இந்தப்படத்தின் டிரெய்லர் பார்த்துப் பாராட்டினார் என்று பேசினார்.

மேலும் இயக்குனர் ராஜா குருசாமி பேசியதாவது, முதலில் என் தயாரிப்பாளர் இல்லாமல் நான் இல்லை , அவருக்கு நன்றி. படக்குழு அனைவருக்கும் நன்றி எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்துள்ளீர்கள். முகச்சுளிப்பு இல்லாமல் இரத்தக் காட்சிகள் இல்லாமல், குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படமாக இந்தப் படம் இருக்கும். நீங்கள் பார்த்து விட்டு உங்கள் ஆதரவைத் தர வேண்டும் நன்றி என்று பேசினார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!