ஷான் ரோல்டன் இணைந்த பிறகு தான் இதை திரைப்படம் என்றே ஏற்றுக் கொண்டனர் -மணிகண்டன்

‘ஜெய் பீம்’ மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘குட் நைட்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் நாயகியாக மீதா ரகுநாத் நடித்துள்ளார். இதில் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இதில் நடிகர் மணிகண்டன் பேசியதாவது, இயக்குனரை சந்தித்து கதை கேட்டபோது, அவர் கதை சொன்ன விதம் எனக்கு பிடித்திருந்தது. இவர் கதையை புரிந்து கொண்டிருக்கும் விதமும், அதனை தெளிவாக எடுத்துரைக்கும் பாணியும் தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தை உண்டாக்கியது. இப்படத்தின் தயாரிப்பாளர்களிடம் சிலர், மணிகண்டனை வைத்து படமெடுக்கிறீர்களே..? தேவையா? என அச்சுறுத்திருக்கிறார்கள். அதற்கு அவர் இந்தக் கதை மீதும் மணிகண்டன் மீதும் இந்தப் பட குழுவினர் மீதும் நம்பிக்கை இருக்கிறது என பதிலளித்திருக்கிறார்.

எனக்கே என் மீது இத்தகைய நம்பிக்கை இல்லாதபோது, என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் நட்புடனும், உரிமையுடனும் பழகினர். அந்த அனுபவம் மறக்க இயலாது. இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க ஒப்புக்கொண்ட பிறகு தான், இது ஒரு திரைப்படம் என்றே பலரும் ஏற்றுக் கொண்டனர். அவரும் இப்படத்திற்காக கடுமையாக உழைத்து இன்றைய வெற்றியை சாத்தியப்படுத்தி இருக்கிறார்” என்று பேசினார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!