யானை முகத்தான் – விமர்சனம்

ஊர்வசியின் வீட்டில் வாடகைக்கு இருக்கும் ரமேஷ் திலக் (கணேசன்) ஊரெல்லாம் கடன் வாங்கி ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தும் பொறுப்பற்ற இளைஞன். தீவிர விநாயகர் பக்தரான இவர் எந்த பிரச்சினை வந்தாலும் விநாயகர்தான் தீர்த்து வைக்க வேண்டும் என்று தினமும் ஒரு கோரிக்கையோடு விநாயகரை வேண்டி வருகிறார். ஒரு நாள் ரமேஷ் திலக்கிற்கு விநாயகர் சிலை, புகைப்படம் என எதுவும் கண்களுக்கு தெரியாமல் போகிறது. இதனால் துடிதுடித்து போன ரமேஷ் திலக்கிற்கு இறுதியில் என்ன நடந்தது..? ஏன் அவர் கண்களுக்கு விநாயகர் புகைப்படங்கள் தெரியவில்லை..? என்பதே படத்தின் மீதிக்கதை.  

நாயகனான ரமேஷ் திலக் மொத்த படத்தையும் தாமே சுமந்துள்ளார். வழக்கமான தனது நடிப்பை கொடுத்தாலும் காமெடி கவுண்டர்கள் மூலம் ரசிகர்களை சிரிக்க வைக்க தவறியுள்ளார். விநாயகராக வரும் யோகிபாபு ஆங்காங்கே திரையில் தோன்றுவது, காமெடி செய்வது என நடித்துள்ளார். ஊர்வசி, கருணாகரன் தங்களுக்கான வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.  காமெடி ஜானரில் கதையை கொண்டு செல்ல நினைத்த இயக்குனர் ரெஜிஷ் மிதிலா அதற்கான உழைப்பை கொடுக்க மறந்து விட்டார். இத்தனை காமெடி பிரபலங்கள் இருந்தும் படத்தில் ஒரு இடத்தில் கூட சிரிப்பு வரவில்லை என்பது ஏமாற்றம்.

படம் முதல் பாதி முழுவதும் ரமேஷ் திலக்கையும் இரண்டாவது பாதி விநாயகரையும் வைத்து நகர்வது சலிப்பை ஏற்படுத்துகிறது. கிளைமேக்ஸில் ரமேஷ் திலக் ஒரு முதியவரோடு பயணிக்கும் காட்சி மட்டுமே உணர்வு பூர்வமாக அமைந்துள்ளது மற்றபடி படத்தில் ரசிக்கும் படியாக எதுவும் இல்லை என்பது கவலையளிக்கிறது. பாரத் சங்கர் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை சுமார் ரகம். கார்த்திக் எஸ் நாயர் படத்திற்கு தேவையான ஒளிப்பதிவை செய்துள்ளார். மொத்தத்தில் யானை முகத்தான் – சோதனை


https://youtube.com/watch?v=QlXP6U3mdW8
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!