‘பிச்சைக்காரன் -2’ ரிலீஸை தடுக்கும் நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டுள்ளது – விஜய் ஆண்டனி வேதனை

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘பிச்சைக்காரன் -2’. இப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மாங்காடு மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜகணபதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த புகார் மனுவில், “மாங்காடு மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான ‘ஆய்வுக் கூடம்’ திரைப்படத்தின் கருவையும், வசனத்தையும் விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன் -2’ திரைப்படத்திற்கு பயன்படுத்தியுள்ளதால் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தனக்கு நஷ்டஈடாக ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சவுந்தர் இந்த மனுவுக்கு ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும் படி விஜய் ஆண்டனிக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்துள்ளார். இந்நிலையில், விஜய் ஆண்டனி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில், ஆய்வுக்கூடம் படம் குறித்த எந்தவொரு தகவலும் தமக்கு தெரியாது என்றும் அந்த படத்தை பார்த்தது கூட இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், வழக்கு தொடரப்பட்ட பிறகே அந்த படத்தை பார்த்ததாகவும் பிச்சைக்காரன் -2 படத்திற்கும் ஆய்வுக்கூடம் படத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்றும் விஜய் ஆண்டனி தரப்பில் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியாவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கடைசி நேரத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் படத்தின் வெளியீடு தள்ளிப்போனதால் பொருளாதார ரீதியாக தனக்கு பெருத்த இழப்பு மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் விஜய் ஆண்டனி அந்த பதில் மனுவில் வேதனை தெரிவித்துள்ளார்.

பிச்சைக்காரன் கதை கரு பொதுவெளியில் உள்ளதோடு இதே கதைகருவோடு 1944-ஆம் ஆண்டு முதல் பல்வேறு மொழிகளில் பல படங்கள் வெளியாகியுள்ளதாகவும் இந்த கதையின் கருவை மனுதாரர் உரிமை கோர முடியாது என்றும் அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கை நீதிபதி ஏப்ரல் 25-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!