ரிப்பப்பரி – விமர்சனம்

நண்பர்களுடன் சேர்ந்து யூடியூப் சேனல் நடத்தி வருகிறார் நாயகன் மகேந்திரன். இவர்கள் பதிவு செய்யும் வீடியோவுக்கு கமெண்ட் செய்து வரும் நாயகி ஆரத்தி பொடியை மகேந்திரன் காதலிக்கிறார். நாயகியை சந்திக்க ஆசைப்படும் மகேந்திரன், அவரின் ஊரை தெரிந்துக் கொண்டு அங்கு செல்கிறார். அந்த ஊரில் ஜாதி மாறி திருமணம் செய்ய முயற்சிக்கும் ஆண்களை அடுத்தடுத்து ஒரு பேய் கொல்கிறது. ஆரத்தி பொடியை சந்திக்க சென்ற இடத்தில் அந்த பேய் இருப்பதை கண்டு பயப்படுகிறார் மகேந்திரன். மேலும் நாயகியின் அண்ணன்தான் அந்த பேய் என்று தெரிந்து ஊரை விட்டு செல்கிறார். இறுதியில் மகேந்திரன் நாயகி ஆரத்தி பொடியை காதலித்து கரம் பிடித்தாரா? ஜாதி மாறி திருமணம் செய்யும் ஆண்களை அந்த பேய் கொல்ல காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மகேந்திரன் துறுதுறுவென இருக்கும் இளைஞனாக நடித்திருக்கிறார். சில இடங்களில் சிரிக்க வைத்தாலும் சில இடங்களில் செயற்கை தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக வரும் ஆரத்தி பொடி அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். பேயாக வந்து மிரட்டும் ஶ்ரீனியின் நடிப்பு சிறப்பு. இவருக்கு ஜோடியாக வரும் காவ்யா அழகு. இருவருக்கும் இடையேயான காதல் காட்சிகள் அருமை. மகேந்திரனின் நண்பர்களாக வரும் நோபல் மற்றும் மாரி கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். பேய் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அருண் கார்த்திக்.

இதில் ஜாதி, காதல், துரோகம், நட்பு, காமெடி என திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர். காமெடி காட்சிகள் பெரியளவில் கைக்கொடுக்கவில்லை. பிளாஷ்பேக்குள் பிளாஷ்பேக் வைத்து திரைக்கதையை குழப்பி இருக்கிறார். காதல் காட்சிகள் ரசிக்க வைத்தாலும், அடுத்தடுத்து வரும் பாடல் காட்சிகள் தோய்வை ஏற்படுத்துகிறது. துவாகரா தியாகராஜனின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. தளபதி ரத்தினத்தின் ஒளிப்பதிவு சிறப்பு. மொத்தத்தில் ரிப்பப்பரி – சுவாரஸ்யம் குறைவு.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!