அஜித், விஜய்க்கு ஏற்ற கதையை தயார் செய்து வைத்துள்ளேன்.. கண்ணன் பொன்னையா

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தேரியூரை சேர்ந்தவர் கண்ணன் பொன்னையா (வயது 46). இவர் கடந்த 1999-ம் ஆண்டு சென்னைக்கு சென்று சினிமா வாய்ப்பு தேடி உள்ளார். இயக்குனர் கவுதம் வாசுதேவ்மேனனிடம் உதவி இயக்குனராக சேர்ந்து மின்னலே படத்தில் பணியாற்றி உள்ளார். அவர் இயக்கிய காக்க காக்க படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.

பின்னர் சில்லுனுஒரு காதல், நடிகர் கமல் நடித்த வேட்டையாடு விளையாடு, நெடுஞ்சாலை, நடிகர் அஜித் நடித்த வேதாளம் ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த ‘பத்துதல’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கண்ணன் பொன்னையா சி.பி.சி.ஐ.டியாக நடித்துள்ளார். இந்த வேடம் அனைவரது கவனத்தையும் ஈர்ந்துள்ளது.

அனைவரது பாராட்டை பெற்றுள்ள கண்ணன் பொன்னையா தனது சொந்த ஊரான உடன்குடி தேரியூருக்கு பங்குனி உத்திரத்தையொட்டி குலதெய்வ சாமி தரிசனம் செய்வதற்கு வருகை தந்தார். அவர் கூறியதாவது, சிறு வயதில் எங்கள் ஊரில் திருவிழா நாட்களில் நாடகம் நடத்துவார்கள். இதில் சிறு வேடங்களில் நடித்துள்ளேன். எனவே சினிமாவில் சேர வேண்டும் என்ற கனவில் சென்னை சென்றேன்.அங்கு பல போராட்டங்களுக்கு பின்பு உதவி இயக்குனராக வாய்ப்பு கிடைத்தது. பின்னர் சிறு வேடங்களில் நடிக்க தொடங்கினேன்.

தற்போது வெளிவந்து வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கும் ‘பத்துதல’ சினிமா படத்தில் எனக்கு நல்ல வேடம் கிடைத்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் என் பெயர் தெரிய தொடங்கி உள்ளது. தற்போது நடிகர் சசிகுமாருடன் நா.நா என்ற படத்தில் நடித்து வருகிறேன். வேறு சில படங்களிலும் நடிக்க அழைப்பு வந்துள்ளது. பெரிய நடிகராக வர வேண்டும் என்பதே எனது லட்சியம்.

மேலும் படம் இயக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. நடிகர் விஜய், அஜித், சூர்யா ஆகியோருக்கு ஏற்ற கதை தயார் செய்து வைத்துள்ளேன். வாய்ப்பு கிடைத்தால் இயக்குவேன். இவ்வாறு அவர் கூறினார். இதைத் தொடர்ந்து ‘பத்துதல’ சினிமாவை பார்த்த உடன்குடி பகுதி இளைஞர்கள் தேரி யூருக்கு நடிகர் கண்ணன் பொன்னையா வந்ததை கேள்விப்பட்டு அவரை நேரில் பார்த்து செல்பி எடுத்துச் சென்றனர்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!