பிரபல மலையாள நடிகர் இன்னொசென்ட் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்

பிரபல மலையாள நடிகர் இன்னொசென்ட், தமிழில் லேசா லேசா, நான் அவளை சந்தித்தபோது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். காமெடி, குணசித்திர கதாபாத்திரங்களில் 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் சிறந்த நடிப்புக்காக கேரள அரசு விருதுகளை பெற்றுள்ளார். மேலும் மலையாள நடிகர் சங்க தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

இன்னொசென்டுக்கு தற்போது 75 வயது ஆகிறது. இவருக்கு ஏற்கனவே தொண்டை புற்றுநோய் ஏற்பட்டு சிகிச்சைக்கு பிண் குணம் அடைந்தார். சில தினங்களுக்கு முன்பு மீண்டும் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனையில் மீண்டும் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவரது உடல்நிலை தொடர்ந்து மோசம் அடைந்து, எக்மோ கருவிகள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நடிகர் இன்னொசென்ட் நேற்று இரவு காலமானார். மருத்துவமனையின் அறிக்கையின்படி, அவர் கொரோனா தொற்று, சுவாச நோய்கள், பல உறுப்புகள் செயல்படாதது மற்றும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் இன்னொசென்ட்டின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!