கப்ஜா – விமர்சனம்

சுதந்திரத்துக்கு முன் பிரிட்டிஷ் இந்தியாவில் மூவர்ணக் கொடியை ஏற்றிய குற்றத்திற்காக ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் பிரிட்டிஷ் அரசால் தூக்கிலிடப்படுகிறார். அதன்பின் அவருடைய மனைவி இரு மகன்களுடன் வேறொரு நகரத்தில் குடியேறுகிறார். அவரது மகன் உபேந்திரா வளர்ந்து விமானப்படை விமானியாக மாறுகிறார். உபேந்திரா சிறுவயதிலிருந்தே மன்னர் குடும்பத்தை சேர்ந்த ஸ்ரியா சரணை காதலித்து வருகிறார்.
 
இதற்கிடையில் உபேந்திராவின் சகோதரர் மாஃபியா டான்களால் கொல்லப்படுகிறார். தனது சகோதரனின் மரணத்திற்கு பழிவாங்குவதற்காக பாதாள உலகத்தின் மோசமான உலகில் நுழைய வேண்டிய கட்டாயத்தில் உபேந்திராவுக்கு ஏற்படுகிறது. பின்னர் மாஃபியாவின் தலைவனாக உபேந்திரா மாறுவது மட்டுமின்றி, ஸ்ரேயாவின் தந்தை விருப்பத்திற்கு மாறாக அவரை திருமணம் செய்து கொள்கிறார். இறுதியில் என்ன ஆனது? ஸ்ரேயாவின் தந்தையை எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
 
தனித்துவமிக்க படங்களுக்கு பெயர் பெற்ற உபேந்திரா மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுகிறார். அவரது ஸ்க்ரீன் பிரசன்ஸ் அழகாக உள்ளது. மாஸான வசனங்களின் மூலம் கவனம் ஈர்க்கிறார். ஸ்ரேயாவின் நடிப்பு ரசிகர்களை ஈர்த்துள்ளது. அவரின் எதார்த்த உடல் மொழி நடிப்பின் மூலம் பாராட்டை பெறுகிறார். சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கிச்சா சுதீப் மற்றும் ஷிவா ராஜ்குமாரின் கதாப்பாத்திரங்கள் மனதில் நிற்கிறது. குறுகிற நிமிடங்களே வந்தாலும் கவனம் ஈர்க்கவைக்கிறது. மேலும் படத்தில் இடம்பெறுகின்றன பல கதாப்பாத்திரங்கள் அவர்களின் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.
 
ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த மாஸான படத்தை கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் இயக்குனர் சந்துரு. படத்தின் கதாப்பாத்திரங்கள் அதிகமாக உள்ளதால் புரிந்து கொள்வது மிகவும் சிரமமாக உள்ளது. கிச்சா சுதீப் மற்றும் ஷிவா ராஜ்குமாரின் கதாப்பாத்திரங்கள் மனதில் பதிகிறது. படத்தை கேஜிஃப் போன்று இயக்க இயக்குனர் முடிவு செய்திருக்கிறார் என்பது படத்தின் பல இடங்களில் தென்படுகிறது. கேஜிஃப் படத்தின் வாசம் பல இடங்களில் தோன்றவைக்கிறது. படத்தின் வன்முறை காட்சிகள் எதார்த்தத்தை மீறுவதாகவுள்ளது. படத்தின் காட்சிகளை சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் ஏஜி.ஷெட்டி. ரவி பஸ்ருரின் பின்னணி இசை ஓகே. பாடல்களில் கவனம் செலுத்தியிருக்கலாம். மொத்தத்தில் கப்ஜா – ஓகே

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!