கதர் ஆடை விற்பனையில் தீவிரம் காட்டும் கமல்ஹாசன்.. துணிகளுடன் இத்தாலி பயணம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன் பல்வேறு வேடங்களில் தனது தனித்துவமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றவர். சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் கமல்ஹாசன் கால் பதித்தார். கடந்த 2008-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் தொடர்ந்து தனித்தே களம் கண்டு வந்தார்.

இந்த நிலையில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணியில் இடம் பெற்றே கமல்ஹாசன் தேர்தலை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன் எப்போதுமே கதர் ஆடைகள் பற்றியும் நெசவாளர்கள் நலன் குறித்தும் அடிக்கடி பேசுவார். கதர் ஆடைகளை அணிவதிலும் அதிக ஆர்வம் கொண்டவரான கமல்ஹாசன் அனைவரும் கதர் ஆடைகளை விரும்பி அணிய வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் கதர் ஆடைகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியாகவும் நவீன மாடல்களில் கதர் ஆடைகளை உருவாக்கும் விதத்திலும் கமல்ஹாசன் கதர் ஆடை நிறுவனம் ஒன்று தொடங்கி நடத்தி வருகிறார்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு கே.எச். (ஹவுஸ் ஆப் கதர்) என்கிற பெயரில் தொடங்கப்பட்ட இந்த விற்பனையகம் மூலமாக பல்வேறு வடிவிலான கதர் ஆடைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ‘ஆன்லைன்’ விற்பனையகமான இந்த நிறுவனத்தின் மூலமாக பலர் கதர் ஆடை களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.

பேஷன் ஷோக்களிலும் கதர் ஆடைகளின் அணி வகுப்பு அதிகரித்துள்ளது. இப்படி ஸ்டைலான கதர் ஆடைகளும் அதிகமாக ஜவுளி சந்தைகளில் விற்பனையாகிக் கொண்டு இருக்கிறது. அதுபோன்ற ஆடைகளையே கமல்ஹாசனின் கே.எச்.விற்பனையகம் விற்பனை செய்து கொண்டிருக்கிறது. இந்த கதர் ஆடை விற்பனை தொழிலை மேம்படுத்தும் வகையில் கமல்ஹாசன் இத்தாலிக்கு சென்றிருக்கிறார். கதர் ஆடை துணிகளின் வடிவமைப்புகளுடன் கமல்ஹாசன் விமானத்தில் இத்தாலிக்கு பறந்துள்ளார். இவர் இத்தாலி சென்றுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



https://youtube.com/watch?v=FZ2G9nGeKtw
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!