ஆண்களும் பெண்களும் சமம் அல்ல.. நடிகர் சதீஷ் அதிரடி பேச்சு

நாளைய இயக்குனர் சீசன் 6-ல் ‘குட்டி தாதா’ என்கிற குறும்படத்திற்காக ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ். என் இயக்கியிருக்கும் படம் குடிமகான். இப்படத்தை சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் பிரகாஷ். என் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். விஜய் சிவன் கதாநாயகனாக நடிக்க, சாந்தினி தமிழரசன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன், சேது, கேபிஒய் ஹானஸ்ட் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் நாளைய இயக்குனர்கள் சீசன்-6ல் பணியாற்றிய கலைஞர்கள் பலரும் இதில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பாலு மகேந்திராவிடம் பணியாற்றிய மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனுஜ் மேனன் இசையமைக்க ஷிபு நீல்.பிஆர் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இந்தப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர், திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நகைச்சுவை நடிகர் சதீஷ் பேசும்போது, “தண்ணி, தம் அடிக்காத டீ-டோட்டலர் என்பதால் என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதற்காக நானும் இங்கே அறிவுரை சொல்ல நினைத்தேன். ஆனால் டிரைலரில் அதை சரியாக சொல்லியிருக்கிறார்கள். பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்கள் அந்த வயதில் மதுப்பழக்கத்திற்கு ஆளாகாமல் இருந்தால் அதன்பின் அதை நாம் தொடவே மாட்டோம். நான் அப்படித்தான் இவற்றில் இருந்து ஒதுங்கினேன்.

இதுபற்றி சில கல்லூரி நிகழ்ச்சிகளில் நான் பேசியிருக்கிறேன். ஒரு பெண்கள் கல்லூரியில் கலந்து கொண்டபோது கூட இதே விஷயத்தை வலியுறுத்தி பேசும்படி அந்த கல்லூரியின் முதல்வர் கேட்டுக் கொண்டது தான் வேடிக்கை. ஏன் என கேட்டதற்கு ஆண்களுக்கு சமமாக இந்த விஷயத்தில் பெண்களும் வளர்ந்து வருகிறார்கள் என கூறினார். ஆண்களும் பெண்களும் ஒருபோதும் சமமானவர்கள் அல்ல. பெண்கள் ஆண்களைவிட இன்னும் கொஞ்சம் மேலானவர்கள் தான். சொல்லப்போனால் பெண்கள் தெய்வத்திற்கு சமம்” என்று கூறினார்.



  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!