தி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்

நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் பரத நாட்டியம் கற்றுக்கொண்டு சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார். பள்ளியில் ஆசிரியராக இருக்கும் ராகுல் ரவீந்திரனை ஐஸ்வர்யா ராஜேஷின் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் மாமியார் வீட்டில் குடும்ப பெண்ணாக தன் மாமியாருக்கு உறுதுணையாக இருக்கிறார். இந்நிலையில், மாமியார் தன் இளைய மகளின் பிரசவத்திற்காக வெளிநாடு செல்கிறார். அப்பொழுதிலிருந்து குடும்ப பொறுப்பு முழுவதையும் ஐஸ்வர்யா ராஜேஷ் கவனித்து கொள்கிறார்.

காலை எழுந்து உணவு சமைப்பது இரவு சமையலறையை சுத்தம் செய்வது என நாட்கள் ஓடுகிறது. ஒரு கட்டத்தில் இந்த வாழ்க்கை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், நடன ஆசிரியர் பணிக்கு செல்ல விருப்பப்படுகிறார். இதற்கு கணவர் மற்றும் மாமனார் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். எதிர்ப்பை மீறி வேலைக்கு செல்ல முயற்சி செய்கிறார். இறுதியில் ஐஸ்வர்யா ராஜேஷ், தன் விருப்பப்படி வேலைக்கு சென்றாரா? சமையலறையில் இருந்து அவருக்கு விடுதலை கிடைத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகியாக நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அளவான நடிப்பை கொடுத்து கவனிக்க வைத்துள்ளார். பாத்திரம் கழுவுவது, வீட்டு வேலை செய்வது என பார்ப்பவர்களை பாராட்ட வைக்கிறார். கணவனாக வரும் ராகுல் ரவீந்திரன், வில்லத்தனம் கலந்த நடிப்பை கொடுத்து தன் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார். யோகிபாபுவின் காமெடி சிரிக்க வைக்க தவறியுள்ளது.

இந்திய பெண்மணிகள் பெரும்பாலும் சமையலறையிலேயே தங்கள் வாழ்நாட்களை கழித்து விடுகின்றனர் என்பதை இப்படத்தின் மூலம் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் ஆர்.கண்ணன். ஏற்கனவே இப்படம் மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற படத்தை தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குனர். மலையாளத்தில் ஜொலித்த அளவிற்கு தமிழில் ஜொலிக்காதது வருத்தம்.

ஒரு சில வசனங்கள் கைத்தட்டல் பெற்றாலும் படம் முழுவதும் சமையலறையை மையப்படுத்தி இருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. சொல்லவந்ததை இன்னும் தெளிவாக சொல்லியிருக்கலாம் என்ற எண்ணத்தையும் எழ வைத்துள்ளது. கிளைமாக்ஸ் காட்சி பலவீனமாக அமைந்துள்ளது. ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் பின்னணி இசை சுமார் ரகம். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவில் கவனம் செலுத்தியிருக்கலாம். மொத்தத்தில் தி கிரேட் இந்தியன் கிச்சன் – சுத்தம் குறைவு.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!